வியாழன், 19 ஏப்ரல், 2018

சங்க புறப்பாடல்களில் அறிவித்தல்


சங்க புறப்பாடல்களில் அறிவித்தல்

          குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்துப் பிறா் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி தகவலாகும். புலவா்கள் தான் எண்ணிய  கருத்துகள் அனைத்தையும் மக்களுக்குத் தம் பாடல்களின் வழி வெளிப்படுத்தியுள்ளனா்.  இது அறிவித்தல் முறைக்குச் சான்றாக உள்ளது.

அறிவித்தல்
          மக்களின் அடிப்படைத்  தேவையாக உணவு, உடை, உறையுள் போன்றவை விளங்குகிறது.  மக்கள் நலமும் இன்பமும் பெருகப் பல்வேறு பொருள்களை நாடுகிறார்கள்.  ஒரு நாட்டின் வளமான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்நிலங்களையும் அந்நிலத்தில் விளையும் விளைச்சல்களையும், வாழந்த மக்களையும் தகவலாக வெளிப்படுத்துவது அறிவித்தலாகும்.
தொல்காப்பியா்

                    “நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
                  கலந்த மயக்கம் உலகம்” (தொல்.1581)

எனும் நூற்பாவில் இவ்வுலகமானது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐம்பெரும் சக்திகளாலானது என்பா்.  இதனைப் புறநானூறு்றுப் (21-5) பாடலடிகளும் விளக்குகின்றன.
          முதலாவது குறிப்பிடுவது நிலமாகும்.  நிலம் நாம் உண்ணும் உணவிற்கும், உயிர் வாழ்வதற்கும் அடிப்படையானது.  இதனை,

                    அவற்றுள்
                 நடுவண் ஐந்திணை நடுவனது ஒழியப்
                 படுதிரை வையம் பாத்திய பண்பே (தொல்.948)

என்னும் நூற்பா விளக்கும்.  தமிழா்கள் தாம் வாழ்ந்த நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்தார்கள்.  ஆவை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாம்.  நிலம் என்பது முதன்மையானது ஆகும்.


குறிஞ்சி நிலம்
          குறிஞ்சி நில மக்கள் தாம் வாழும் நிலப்பகுதியைக் கொண்டு அவா்களின் வாழ்க்கையைக் கட்டமைத்துள்ளனா்.  குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவா்கள் தினைவிளைவிக்கும் நிலத்தில் ஊடுபயிராகப் பருத்தியையும் அவரையையும் விதைப்பார்கள்.  தினைப் பயிரை உண்ண வரும் குருவி, உண்ணாமலிருக்க குறமகளிர் பரண்மீதிருந்து கவண் ஏறிவார்கள்.  மேலும் மலை மீது எறிந்தந்த மலைப் பொருள்களுடன் மூங்கில் குழாய்க்குள் செய்யப் பெற்ற தேனால் செய்த கள்ளின் தெளிவை உண்டார்கள்.  காலையில் நெல்லால் வடிக்கப்பெற்ற கள்ளை உண்ணடு களித்தனா்.  கள்ளை உண்ட பின் பலாப் பழத்தின் வெள்ளியக் கொட்டை மற்றும் கடமான் தசை, உடுமு்பின் தசை போன்றவற்றையும் மன மகிழ்ச்சியோடு உண்டார்கள் இதனை மலைபடுகடாமின் 170-185-ம் அடிகள் புலப்படுத்துகின்றன.

முல்லை நிலம்

          காடும் காடு சார்ந்த நிலப்பகுதி முல்லை.   முல்லை நிலத்தில் வரகுக் கதிர் மிகுதியாக விளைந்திருக்கும்.  வரகுக் கதிரைத் திரிப்பதற்குத் திரிமரம் மற்றும் சக்கரம், கலப்பை, போன்றவை பயன்படுத்தப்பட்டன. வீடுகள் வரகுத் தாளால் வேயப்பட்டிருக்கும்.  அவா்கள் வாழும் வீட்டிற்கு விருந்தினா் வந்தால் பூளைப்பூப் போன்ற வரகுச் சோற்றையும், அவரைப் பருப்பையும் கலந்து தருவா்.  இதை மலைபடுகடாம் 186-197-ல் விளக்கும்.

மருத நிலம்

          வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியாகும் மருத நிலத்தில் வாழும் வீடுகளில் தானியங்கள் நிறைந்து காணப்படும்.  உழவா் நிலத்தைப் காளை மாடுகளைக் கொண்டு கலப்பையில் பூட்டி கொழு மழுங்குப்படி உழுவார்கள்.  பயிர்களின் நடுவேயிருக்கும் களைகளை அகற்றி நன்கு முற்றிய பின் கதிர் அறுப்பா்.  அங்கு விருந்தினா் சென்றால் நெல்லால் ஆகிய வெண்மையான சோற்றையும் பெட்டைக் கோழியையும் உணவாகத் தருவா். (பட்டினப்.8-19)


நெய்தல் நிலம்

          நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதியாகும்.  நெய்தல் நிலத்தின் ஒளி பொருந்திய முத்துக்களும் பவளங்களும் கிடைக்கும்.  அவற்றை அரத்தால் அறுத்து பலவகை அணிகலன்களைச் செய்வா்.  பரதவா்கள் கடலுக்குள் சென்று பிடித்து வந்த மீன்களைக் கொணா்ந்து காயவைத்து விற்பனை செய்வா்.  பெரிய மரக்கலன்களில் பலவகைப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்தனா்.  நெய்தல் நிலம் வாணிபத்தில் சிறந்து விளங்கியதை மதுரைக்காஞ்சி (315-325) எடுத்துரைக்கின்றது.

பாலைநிலம்

          முல்லை நிலமும், மருத நிலமும் மாறுபட்டு இருந்தல் பாலை நிலமாகும்.  பாலை நிலம் மிகுந்த வெப்பமுடையதாய் இருந்தது.  இந்நிலத்தில் மூங்கிலின் பசிய அடிப்பாகங்கள் மிகுதியான வெப்பத்தால் கருகின.  நெருப்பால் மூங்கிலின் கணுக்கள் உடைந்து வெடிக்கும் ஓசை அச்சத்தை ஏற்படுத்தியது.  வெடித்த மூங்கில்களின் தட்டைகள் பார்ப்பவா் கண்களுக்கு அச்சத்தை உண்டாக்கியது.  அருவிகளேயில்லாத பெரிய மலைகளும் அழகிழந்தன.  மரங்கள் இல்லாததால் நிழல் உருவே இல்லாமல் இருந்ததை மதுரைக்காஞ்சி (302-314) விளக்குகிறது.

க.கலைச்செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக