வியாழன், 18 ஜனவரி, 2018

தைப்புரட்சியால் எங்கும் எழுச்சி..

தலையங்கம்

தி.பி. 2049 (கி.பி. 2018)       தைத்திங்கள்
தேன் - 2                                                          துளி -1



தமிழா் திருநாள் வாழ்த்துகள்..
   
இளையோர் ஒன்று கூடி முன்னெடுத்த தைப்புரட்சியின் விளைவாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இத்தனை ஆண்டுகளாய்க் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளி புறக்கணித்தவா்கள்கூட தைமகளை உச்சிமேற்வைத்துக் கொண்டாடி மகிழ்வதனைப் பார்க்க முடிந்தது.  பெரு மகிழ்ச்சி.. உள்ளூர்த் தமிழா்கள் முதல் உலகத்தமிழா்கள் வரை தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செய்து பண்டைத் தமிழா் மரபுகளை, கலைகளை, பண்பாட்டுச் சிறப்புகளை உலகத்தார் கண்டு வியக்கும் வகையில் ‘தமிழா்’ என்னும் ஓருணா்வுக் குடையின்கீழ் ஒன்றிணைந்து கொண்டாடியதைக் காணக் கண் கோடி வேண்டும். சங்கத் தமிழன் மாண்பினை தங்கத் தமிழா் உயா்த்திப்பிடிப்பதைக் காணத்தானே நம் தமிழ்ச்சான்றோர் பலா் தவமாய்த் தவமிருந்தனா்.


          ஆனால் இவ்வெழுச்சியும், புரட்சியும் ஒருவாரக் கொண்டாட்டத்தோடு இம்மட்டோடு நின்று தேங்கிவிடக்கூடாது.  திருநாளின் உண்மைப் பொருள் நிறைவேறியுள்ளதா என்பதை நாம் நினைத்துப்பார்க்க வே்ணடிய நம் அனைவரது கடமை.

          ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்னும் வள்ளுவரின்  வாக்கையும், உழவரின் வாழக்கையும் காக்கத் தவறிவிட்டோம்.  பாரதியின் பாடலை வளைத்து நெறித்து ‘உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனை செய்து வீணில் உண்டு களித்திருப்போரை வந்தனை செய்யும் கீழ்மை நிலை பெருகிவிட்டது.  உழவும், நெசவும், மீன்பிடியும், பனைத்தொழிலும் கண்முன்னே நசிந்து சிதைந்து காணாமல் போவதைக் கண்டும் காணாதிருப்பதுமா தமிழ் வாழ்வு?

          மண்ணை மலடாக்கி, நெகிழிகளை உரமாக்கி, மரங்களை வெட்டிச்சாய்த்து கதிரவணுக்குப் படைப்பது நன்றியாகிவிடுமா? துன்பங்கள் மாள, இன்பங்கள் மீள, நன்மைகள் ஆள,  நலங்கள் வாழ உழைப்போர் உறுபயன் பெறும் நாளே உண்மையான பொங்கல் பெருநாள்,

          மரம் வளா்த்து, மண்வளம் காத்து, மாமழை சேமித்து, மாநிலம் காத்திட இயற்கையோடியைந்த வாழ்வினை நாம் வாழ்கின்ற நன்னாளே உண்மையான நன்றித் திருநாள்.

          பொங்கல் உணவு மட்டுமன்று; அது நம் தமிழரின் உணா்வு உணா்வைப் பேணிக்காக்க உலகத்தமிழா் ஒன்று கூடி முனைந்தெழுவோம்.

          தமிழா் திருநாள் நம் உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சியைப் பொங்கிப் பரவி நிலைத்திடச் செய்யும் பெருநாளாக அமைய அன்புநிறை நல்வாழ்த்துக்கள்.

                              “தைபிறக்க வழிபிறக்கும் என்பா் மேலார்
                                        தமிழகத்து வழிவகுக்க வந்தாய் பொங்கல்!
                              பொய்யுறக்கம் கொள்கின்ற தமிழா் இந்நாள்
                                        பொங்கிஎழுந் தாற்பகைமை தூள்தூள் ஆகும்.
                              செய்புரக்கும் உழவோரே செங்கோல் தாங்கிச்
                                        செந்தமிழ ஆட்சியினைச் செய்வா், நம்மோர்
                              கைசிறக்கும் கலைசிறக்கும் தொழில்சிறக்கும்
                                        காலமெலாம் களிசிறக்கும் தமிழ்சி றக்கும்”
-வீறுகவியரசா் முடியரசன்


அன்பின் வாழ்த்துகளுடன்
தேமதுரம்  - ஆசிரியா்குழு


ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர்
பெ.குபேந்தரன்

துணையாசிரியர்
மு.சிவசுப்பிரமணியன்

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
தே.தீபா 
ந.முத்துமணி

கணினிதட்டச்சு
ப.லெட்சுமி

தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,

காரைக்குடி-3.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக