புதன், 17 ஜனவரி, 2018

உழவா் திருநாள்

உழவா் திருநாள்

         மதிய உணவு இடைவேளை.  ஆசிரியா் ஓய்வரையில் ஆசிரியா்கள் ஒருவருக்கொருவா் உணவுகளைக் பரிமாறிக்கொண்டு உண்ணத் தொடங்கினா்.

          ஆசிரியா் ஸ்டீபன் நேவிஸ்-க்கு எதிரே உட்கார்ந்திருந்த விமல் சார்-க்கு அடுத்தடுத்து அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டேயிருக்க சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எழுந்து சென்று பேசுவதும், வந்து உட்காருவதுமாக இருந்ததைப் பார்த்து, சாப்பிட்டுக் கைகழுவ எழுந்த நேவிஸ் பொறுமையிழந்து கேட்டுவிட்டார்.  “சார், ஒன்று - பேசிட்டுச் சாப்பிடுங்க... இல்லைனா சாப்பிட்டு முடிச்சிட்டுப்பேசுங்க...”
          “இல்ல சார்.. சாப்பாட்டு நேரங்கிறதால அடுத்தடுத்து முக்கியமான போன் கால் வந்துட்டேயிருந்தது அதான்..”
          என்ன முக்கியமானதுனாலும் சாப்பாட்ட காக்க வைக்ககூடாது சார்.
          “ஏன் சார்.. சாப்பாட்டுக்கு என்ன உயிரா இருக்கு?  நம்மள இப்படி காக்க வைக்குறானேன்னு அது ஃபீல் பண்ணவா போகுது” சிரித்தார் விமல்.
          அப்படியில்ல விமல் சார்.  தமிழ்த்தாய் வாழ்த்துக்கு, தேசியக் கொடிக்கு, தேசிய கீதத்திற்குலாம் நாம் மதிப்பு கொடுக்குறாமே.. அதுக்குலாம் உயிர் இருக்குதுன்னா நாம மதிப்பு கொடுக்குறோம்?  அதுபோலதான் சார் நம்ம உணவும்.   அதுக்கும் நாம உரிய மரியாதை கொடுக்கணும் சார்.
          “புரிஞ்சுது சார்.. தப்புதான்”  என்று விமல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே செல்போன் மணி ஒலிக்க, அழைப்பைத் துண்டித்த விமலிடம் “ரொம்ப நன்றி சார்” என்றார் நோவிஸ்.
          கை கழுவும்போது பக்கத்தில் உணவுக் கழிவு தொட்டியில் சாப்பாட்டை கொட்டிக் கொண்டிருந்த மைக்கேலிடம் “சார்..... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. நீங்களே இப்படி சாப்பாட்டு வீணாக்கலாமா சார்?”
          “சாப்பிட முடிஞ்சாதான் சாப்பிட்டிருவேனே சார்.. வீட்டுல நிறைய வைச்சுவிட்டுட்டாங்க..”
          “சார் சாப்பிட முடியாதத, இராத்திரி வரைக்கும் கெடாம இருக்கும்னா கைபடாம வீட்டுக்கே திருப்பிக் கொண்டு போய்டலாமே சார் காய்கறிகள் விக்குற விலைக்கு அதை இப்படி குப்பையில போடலாமா?  உணவை வீணக்குறதுக்கும், உணவுப் பொருளைப் பதுக்குறதுக்கும் ரொம்ப வித்தியாசமில்லை சார்.... இது அறிவுரையில்ல சார்.. என்னோடே வேண்டுகோள்”
          “பரவாயில்ல சார்... நல்லதைத்தானே சொல்றீங்க, கடமையை உணா்த்துனதுக்கு நன்றி சார்”  என்றார் மைக்கேல்.
          நோவிஸ்-க்கு இந்த குணம் இன்று நேற்றல்ல.. இயற்கை உணவு, இயற்கை மருத்துவத்தில் மிகுந்த ஆா்வமுள்ள அவா் பள்ளியில் நலவாழ்வு இயக்கத்திற்குப் பொறுப்பாசிரியா் பொறுப்பை விரும்பி ஏற்றுக்கொண்டார்.  பள்ளியில் நலவாழ்வுக் கருத்தரங்கம் நடத்துவது, அறிவிப்பு பலகையில் உடல் நலம் தொடா்பாக ‘தினம் ஒரு தகவல்’ எழுதி ஆசிரியா்களை அவா் வழிக்கு.  இல்லையில்லை.. இயற்கை முறை வழிக்குக் கொண்டுவந்து விட்டார்.
          பொங்கல் விடுமுறைக்கு முதல்நாள் காலையில் ஆசிரியா்கள்  அறைக்குள் நுழைந்ததும் வழக்கம்போல் ஆா்வமாய் இன்று ஒரு தகவல் வாசித்தார்கள்.. அதிலிருந்து இதுதான்.
          ‘மண்பானை மஞ்சள் கரும்போடு, ஒரு கிலோ அசிரியும் விலைக்கு வாங்கினார் விவசாயி.  பொங்கல் வைக்க’  இன்று இப்படித்தானிருக்கிறது விவசாயிகளின் நிலைமை.  விவசாயி எலிக்கறி சாப்பிடுவது நாம் சாப்பிடுவதுபோல சாதாரண செய்தியாகத் தெரிகிறது நம்மில் பலருக்கு.. வருமானச் சான்றிதழில் தொழில் விவசாயம் என்று போட்டுக் கொள்ளும் பலா் விவசாயிகளே இல்லை... சலுகைக்காய் விவசாயத் தொழில் என்று போட்டுக் கொள்ளும் பலா், விவசாயத்தால் கிடைக்கும் உணவுகளை உண்டு வாழும் இந்த தேசம் - விவசாயத்தையும், விவசாயிகளையும் ஒட்டு மொத்தமாய் என்றைக்கு மதித்து வாழ்கிறதோ அன்றுதான் உண்மையில் உழவா் திருநாள்.
          உண்மையான உழவா் திருநாளுக்காய்.... உழவன் பின்நின்று உரத்த குரல் எழுப்புகிறது நம் பள்ளி நலவாழ்வு இயக்கம் என்று ஒட்டப்பட்டிருந்தது.
          வாசித்தவா்களின் மனதில் பற்றியெழுந்த உணா்வுத்தீ, வகுப்பறைகளில் மாணவா்கள் உள்ளங்களில் சுடா்விட்டெழுந்தது.  ஒன்று பலவாய், ஒளிப் பிழம்பாய்க் கூடி அது, உழவா்களின் வாழ்விற்கு ஒளிவிளக்காய் நிச்சயமாய் மாறும்.

-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக