செவ்வாய், 14 மார்ச், 2017

புத்தக மதிப்புரை


                                                                                                                                                                                             நூலாசிரியா் 
பேரா.கா.மீனாட்சி சுந்தரம்
                                                                            வெளியீடு
நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098
தொலைபேசி 26359906
  26251968
இணையதளம்
ncbhbook@yahoo.co.in
பக்கம் - 140, விலை - ரூ.80.00

           

‘தமிழின் செம்மொழித் தன்மையும் உலக இலக்கியங்களும்என்னும் நூல் பேரா.கா.மீனாட்சிசுந்தரம் அவா்களால் இயற்றப்பட்டது ஆகும்.  ஆய்வாளர்கள் செம்மொழியின் தன்மையினை அறிந்து கொள்வதற்கு பயன்பாடுடைய நூலாக இந்நூல் திகழ்கின்றது.  இந்நூலானது 14 கட்டுரைகளைக் கொண்டு ஆய்வுச் சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது.

            சங்க கால .இலக்கியங்களின் தோற்றம் உலக இலக்கியங்களைப் போல் இல்லாமல் தனித்த செந்நெறிக் கொண்டு அமைவதை இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது.  உலக இலக்கியங்களில் காணப்பெறாத கலை, கற்பனை, அகப்பொருள் மரபு, புறப்பொருள் மரபு, நாடக முறைமை, இயற்கை, அணிகள், இலக்கண நெறி போன்றவை சங்ககால இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.  இத்தகு சிறப்பினால் சங்ககால இலக்கியத்தின் சிறப்பினை நன்கு அறிய முடிகிறது.  எனக் குறிப்பிடுகிறார்.  உலக இலக்கியங்கட்கும் சங்க இலக்கியங்கட்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைச் சுட்டும் நோக்கில் இந்நூல் அமையப் பெற்றுள்ளது.

            பிறமொழி இலக்கியங்களில் காணப்பெறும் பாணா்கள் நாடுகளைச் சுற்றி வரும் வாய்மொழிப்பாடும் பாணா்கள் ஆவா்.  சங்க இலக்கியத்தில் சுட்டப்பெறும் பாணா்கள் நாடோடிகளாக வாழவில்லை மாறாக தமக்கெனச் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துள்ளனா். பாணா்களின் வாழ்க்கையானது உரிமையும் பெருமையும் கொண்ட வாழ்வாகும் என்பதை ஆசிரியர் கட்டுரையின் வழி வெளிப்படுத்துகிறார்.

            இன்றைய மொழியியலார் குறிப்பிடும் மொழிக் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.  இன்றைய விஞ்ஞான முறையில் ஆராயும் மொழியியலானது அக்கால இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உள்ளதை அறியும் பொழுது தமிழனுக்கு பெருமைத் தோன்றுகிறது என்பதை கட்டுரையின் வழி வெளிப்படுத்துகிறார் ஆசிரியா்.

            திருக்குறளானது சங்கப் பாக்களின் வடிவத்திலும், அகப்புற உணா்வுகளிலும் வேறுபட்டு நிற்கின்றது.  வள்ளுவா் வழியில் அறிவு முதலிடம் பெறுகின்றது.  உணா்ச்சியானது  இரண்டாம் இடத்தைப் பெறுகின்றது என்பதை, “திருவள்ளுவரின் புரட்சி” என்னும் கட்டுரையின் வழி விளக்கியுள்ளார்.

            தொல்காப்பியம் குறிப்பிடும் உலகத்தோற்றம், உயிர்களின் பாகுபாடு, இடமும் காலமும், ஒலியும் ஒளியும், உயிர்மெய் பெயரிடல், குற்றியலுகரத்தன்மை, எண்களின் பெயர்கள் போன்றவை தொல்காப்பயரின் அறிவியல் பார்வையினை எடுத்துக்காட்டுகிறது.  என்பதை சான்றுகளின் வழி விளக்குகிறார். கா.மீனாட்சிசுந்தரம்

            சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் உளவியல் கோட்பாட்டின் அடிப்படையில் திட்டமிட்டு அமைத்துள்ளார் என்பதை “சிலம்பு உணா்த்தும் பொறுப்புணா்ச்சி - ஓா் உளவியல் கோட்பாடே” என்னும் கட்டுரையின் வழி விளக்குகிறார் ஆசிரியா்.  சிலம்பும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களாகும்.  மணிமேகலைக் காப்பியத்தில் அறம் அறிவுறுத்தலும் சிலப்பதிகாரக் காப்பியத்தில் கோவலனின் படிமத்தினையும், கண்ணகியின் மறுபிறப்பினையும் கட்டுரையின் வழி ஆய்வு நோக்கில் அமைத்துள்ளார்.

            பேரா.கா.மீனாட்சிசுந்தரம் இயற்றிய “தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்” என்னும் இந்நூலானது தமிழ் மொழியின் இலக்கண இலக்கியப் புலமையை வெளிப்படுத்தியமையும் ஆய்வாளா்களை சிந்திக்கும் நோக்கில் அமையப் பெற்றுள்ளமையும் பாராட்டுதற்குரியது.

ஆ.அருள்சாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக