செவ்வாய், 14 மார்ச், 2017

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து


            பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என வழங்கப்பெறும் பழமொழிக்குத் திருமணம் போன்ற விசேடங்களில் கலந்து கொள்ளும் பொழுது முதல் இரண்டாவது பந்திகளில் உணவு உண்டு விட வேண்டும்.  இல்லையேல் தீர்ந்துவிடும்  கிடைக்காது, என்றும் படைக்குப் பிந்து என்பதற்குப் போர்க்களத்தில் முன்னிலையில்  செல்லக்கூடாது அப்படிச் சென்றால் உயிரிழக்க நேரிடும் எனவே பிந்தியே செல்லவேண்டும் எனவும் பொருள் கூறப்பெறுகிறது.  இப்பழமொழியில் “கை“ என்னும் சொல் ஈரிடங்களில் விடுபட்டுள
            பந்திக்கு முந்து கை படைக்குப்பிந்து கை உணவு உண்பதற்குப் பயன்படுவது வலக்கை நாம் எந்த ஒரு செயல் செய்தாலும் முந்திவரும் கை, வலக்கை அதனால் உணவு உண்ணும் பந்திக்கு முந்தி வரக்கூடிய கையைப் பயன் படுத்த வேண்டும் என்றும், பண்டைக் காலத்தில் வில், அம்பு வைத்துப் போரிடுவா் அப்படிப் போரிடும் போது பயன்படுத்தப்பெறும் அம்புகளை அம்பறாத்தூணி என்னும் ஒரு குடுவையில் இட்டு அதை முதுகுப்புறத்தின் இடப்பக்கத்தில் மாட்டியிருப்பா்.  போரிடும் போது அம்புகளை விரைந்து எடுத்துக் கொடுப்பதற்கு இடது கையான பிந்து கை பெரிதும் பயன்படும். எனவே இவ்விரு செயல்களை அடிப்படையாகக் கொண்டு மக்களின் அனுபவ அறிவின் அடிப்படையில் உருவானதே  பந்திக்கு முந்து கை படைக்குப் பிந்து கை என்னும் பழமொழியாகும்.

-பேரா.சே.செந்தமிழ்ப்பாவை

ஒப்புரவு ஒழுகு


                    ‘ ‘சார்..  உங்களை  பிரின்சிபல் சார் கூப்பிடுறாரு..”
            உலகத் தாய்மொழி நாளின் முக்கியத்துவம் பற்றியும், அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் தமிழ் எட்டாவது இடத்திலிருப்பது பற்றியும் யுனெஸ்கோ அறிவித்திருப்பதை உணா்வுப்பூா்வமாக பாடம் நடத்திக் கொண்டிருந்த தமிழாசிரியா் முடியரசன் அலுவலக உதவியாளர் குமாரை உற்றுப் பார்த்து ‘தகவலுக்கு நன்றிங்கய்யா.. நான் போய் பார்த்துக்குறேன்” என்று சொல்லி  மாணவா்களை அமைதியாக இருக்க அறிவுறுத்திவிட்டு,  பள்ளி முதல்வா் அறையை நோக்கி நடக்கத்தொடங்கினார்.  முடியரசன் ஐந்தாண்டுகளாக  இந்த ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் பணியாற்றி வருகிறார்.  இவரை பணியில் சேர்த்த பள்ளிமுதல்வா் தமிழார்வமும், சமூக அக்கறையும் நிரம்பியவா். ஆனால் அவரோ, 6 மாதங்களுக்கு முன்பு பணிநிறைவு பெற்றுவிட்டார்.  புதிதாக வந்துள்ள பொறுப்பு முதல்வா் முடியரசனைக் கண்காணிப்பதையே தன் பொறுப்பாக எண்ணி அவரது நடவடிக்கைகள் முழுவதும் கண்காணித்து வருகிறார்.  ‘எதற்கெடுத்தாலும் குறை சொல்லி, குற்றம் கண்டுபிடிக்கும் முதல்வா் இன்று என்ன விசாரணை வைத்திருக்கிறாரோ?’ என்று ஆா்வத்தோடு முதல்வா் அறைக்குள் நுழைந்தார்.
            உள்ளே முதல்வா், துணைமுதல்வா், துறை ஒருங்கிணைப்பாளர் மூவரும் விசாரிக்கத்  தயாராக இருந்தனா். வணக்கம் செலுத்திய முடியரசனுக்கு பதில்வணக்கம் சொல்லாததிலேயே அவா்கள் எவ்வளவு வெறுப்போடிருக்கிறார்கள் என்பதை உணா்ந்து கொண்டார் முடியரசன்.
            ”ஐயா, நீங்க கூப்பிட்டீங்கன்னு அலுவலக உதவியாளர் அழைச்சாரு..”
”மிஸ்டர்.. உங்கள் வேலை ஒழுங்கா பாடத்த மட்டும் நடத்தி பசங்கள ஸ்கோர் பண்ண வைக்குறதுதான்.  அத மட்டுமே பார்த்தா போதும்.. தேவையில்லாத விசயங்களப் பேசி அவங்க மெமரிய ஸ்பாயில் பண்ணுறீங்க..”
            ”பாடமும், மதிப்பெண்ணும் மட்டுமே போதும்னா ஆசிரியா் எதுக்குங்கய்யா? நந்தினி, ஹாசினி, ரித்திகாக்களோட எண்ணிக்கை  அதிகமாகுறதுக்கா? பாடத்தை மட்டுமே ஒப்பிக்க நா ஒன்னும் இயந்திரமில்ல..  சராசரி மனிதன் அவ்வளவுதான்.. மாணவா்களுக்கு எது நல்லதோ அதை பாடத்தோடு சோ்த்து சொல்லிக் கொடுக்குறேன். ”
            ”அதைத்தான் வேண்டாம்னு சொல்றேன்.  ஏற்கனவே இருந்த பிரின்சிபல் எப்படியோ? நா வந்த பிறகு இதெல்லாம் இருக்கக்கூடாது. ஸ்டேட் ராங்கு எடுக்க வைக்குறது தான் நம்மோட எய்ம்.  நீங்க என்னடான்னா கிளாஸ்ல இன விடுதலை, மொழி விடுதலை, நாட்டு விடுதலைனு பைத்தியக்காரத்தனமா பேசி பசங்கள தேவையில்லாம டிஸ்ட்ராக்சன் பண்ணுறீங்க ”முதல்வா் சொன்னதை துணைமுதல்வரும், துறை ஒருங்கிணைப்பாளரும் வேகவேகமாய் தலையாட்டி ஆமோதித்தார்கள்.
”ஐயா, புரியல.. நான் பசங்களோட வழிய எதையும் மாத்தலை..  அழிக்கலை.. சரியான பாதை எதுனு வழிகாட்டுற வழிகாட்டியாதானிருக்கேன்.. இது தப்பா? ”
            ”தப்புதான்.. ஏற்கனவே சல்லிக்கட்டுப் பேராட்டத்துல பசங்கள தூண்டி விட்டீங்க.. கிளாஸ்ல தமிழ்ல பேசச் சொல்லி கட்டாயப்படுத்துனிங்கன்னு உங்கமேல் ஏகப்பட்ட கம்ப்ளைண்ட்ஸ் இருக்கு..”
            ”ஐயா, தமிழ் நாட்டுல தமிழில் பேசச் சொல்றது தான் குற்றமா? தமிழரோட இன அடையாளத்தை மீட்டெடுக்கணும்னு சொல்லிக் கொடுக்குறதுதான் துரோகமா?”
            ”உங்க பாடம் தமிழ்தானே..  நீங்க ஏன் அரசியல் நடத்துறீங்க?”துணைத் தலைவா் தன் பங்கிற்கு விசாரித்துவிட்ட பூரிப்பில் முதல்வரைப் பார்த்தார்.
            ”ஐயா, மொழி  வேற.. அரசியல் வேற இல்ல.. அரசியல் பாடம் நடத்தலாம். சிலரைப் போல அரசியல்ல பிழைப்பு நடத்துறதுதான் தப்பு”
            முடியரசன் சொன்னது ஒருங்கிணைப்பாளரை சுட்டிருக்க வேண்டும். உடனே கூறினார்.  ”திமிர் பிடிச்சவா் சார் இவரு.. எவ்வளவு அலட்சியமா பதிலுக்குப் பதில் பேசுறாரு பாருங்க. ”  வன்மம் தலைக்கேறி கொந்தளித்தார்.
            ”ஐயா.. சிறிய திருத்தம் நான் திமிர் பிடிச்சவனில்ல.. தமிழ் படிச்சவன். பதிலுக்குப் பதில் பேசல.. கேள்விக்குத்தான் பதில் சொல்றேன்.  கேள்விக்குப் பதில் நான் சொல்லாமயிருந்தா  அதை அலட்சியம்னு சொல்லலாம்.. ஆனா..”
பேசிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்தார் முதல்வா். ”உங்க விளக்கம்லாம் ஏத்துக்குற மாதிரியில்ல.. என்னால் உங்கள வேலையிலிருந்து தூக்கமுடியும்”
            ”இதை நீங்க துவக்கத்திலேயே சொல்லியிருக்கலாமே.. தலைமைக்குத் தகுந்த மாதிரி கொள்கைகளை மாத்திக்குற பழக்கம் எனக்கில்லை.. ‘சிங்கத்தின் வாலாக இருப்பதை விட எறும்பின் தலையாக இருப்பது மேல்’னு எங்க ஆசிரியா் எனக்கு சொல்லியிருக்குறாரு.. நீங்க வேலையிலிருந்து என்னைத் துக்கி எறியலாம். பசங்க மனசுல நான் விதைச்ச மொழி, இன உணா்வுகளை உங்களால நகா்த்தக் கூட முடியாது. பணி விலகல் கடிதம் என் சட்டைப் பையிலேயே இரண்டு மாதங்களா இருக்கு..’’ எடுத்து நீட்டி பதிலை எதிர்பாராமல் வீட்டுக்கு விறுவிறு வென்று நடந்தார் முடியரசன்.
            பள்ளியிலிருந்து பாதியிலேயே வந்த கணவனின் முகம் பார்த்ததும் புரிந்து கொண்டாள் கலைச்செல்வி.  ”உங்கள் தகுதிக்கு சரியான இடம் இதில்லை.. வேறு பள்ளி பார்த்துக்கொள்ளலாம். மனதை வருத்திக்காதீங்க..”தலைகோதிவிட்டார் மனைவி கலைச் செல்வி.
     ”இன்னும் என்ன தூக்கம்? விடிஞ்சு நேரமாச்சு.. எந்திரிங்க..”  மனைவி வித்யாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.. நெஞ்சில் கவியரசா் முடியரசனின் பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் நூல் விரிந்து கிடந்தது.
                 முடியரசனையும், கலைச்செல்வியையும் நினைப்பது சுலபம். அவா்களாகவே இருப்பது சிரமம். சிரமத்தை ஏற்றால் தானே சிகரத்தை அடையலாம். கண்ட கனவு சொல்லியிருந்த தீா்வை மனதிற்குள் தீா்மானமாய் வடித்துக் கொண்டேன்.   

             வெளியேயும் இருள் விலகி, பொழுது புலா்ந்து கொண்டிருந்தது..

குறள்:   
            ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
            விற்றுக்கோள் தக்க துடைத்து. (220)

விளக்கம்:

     ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும்      தகுதி உடையதாகும்.




-        ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்.

மகளிர் சிறப்பு


பொறுமையின் சிகரமாய்
படைத்தான் பெண்மை!
பொறுப்பினை சிறப்பென
மேற்கொள்கிறார் பெண்!

குடும்ப அலுவல்
கல்வினெ சமூகஇன்னல்களின்
தளைகளை கதா்ந்தெறிந்து...
சாதனைகளைப் படைக்கின்றாள்!

நேர்கொண்ட பார்வை
நிமிர்ந்த நன்னடையென...
பாரதியின் பொன்மொழிகளை
நனவாக்கி திகழ்கின்றாள்!

அன்னையோர் ஆலயமென
அன்பினை பரப்பி...
உலகின் சிகரமாய்
உயர்ந்து காணப்படுகினறாள்!

-தே.தீபா

பெண்ணின் பெருமை


சூரியன் இல்லாமல் பூமியும் சுழலாது
பெண்மை இல்லாமல் உலகு இயங்காது
எலும்புகள் இல்லாத
எறும்புகளுக்கும் கூட
எத்தனையோ இலட்சியம்!
பெண்ணே
சாதனைகளோடு சரித்திரம்
படைக்கக் கடவுளால்
படைக்கப்பட்ட கற்பகவிருட்சம் நீ!
யானையின் பலம்
யானைக்குத் தெரியாது - அதுபோல்
உன்பலம் உனக்குத் தெரியாது!
உலகில் உள்ள உறவுகளைக் கொடுத்தவள் நீ!
கண்முன் தோன்றிய கடவுள் நீ!
பூமியில் பிறந்த தேவதை நீ!
சொல்ல முடியாது உன் மகிமை
சொல்லி முடியாது உன் பெருமை!

லெ.பொ.பிரியா

புத்தக மதிப்புரை


                                                                                                                                                                                             நூலாசிரியா் 
பேரா.கா.மீனாட்சி சுந்தரம்
                                                                            வெளியீடு
நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098
தொலைபேசி 26359906
  26251968
இணையதளம்
ncbhbook@yahoo.co.in
பக்கம் - 140, விலை - ரூ.80.00

           

‘தமிழின் செம்மொழித் தன்மையும் உலக இலக்கியங்களும்என்னும் நூல் பேரா.கா.மீனாட்சிசுந்தரம் அவா்களால் இயற்றப்பட்டது ஆகும்.  ஆய்வாளர்கள் செம்மொழியின் தன்மையினை அறிந்து கொள்வதற்கு பயன்பாடுடைய நூலாக இந்நூல் திகழ்கின்றது.  இந்நூலானது 14 கட்டுரைகளைக் கொண்டு ஆய்வுச் சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது.

            சங்க கால .இலக்கியங்களின் தோற்றம் உலக இலக்கியங்களைப் போல் இல்லாமல் தனித்த செந்நெறிக் கொண்டு அமைவதை இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது.  உலக இலக்கியங்களில் காணப்பெறாத கலை, கற்பனை, அகப்பொருள் மரபு, புறப்பொருள் மரபு, நாடக முறைமை, இயற்கை, அணிகள், இலக்கண நெறி போன்றவை சங்ககால இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.  இத்தகு சிறப்பினால் சங்ககால இலக்கியத்தின் சிறப்பினை நன்கு அறிய முடிகிறது.  எனக் குறிப்பிடுகிறார்.  உலக இலக்கியங்கட்கும் சங்க இலக்கியங்கட்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைச் சுட்டும் நோக்கில் இந்நூல் அமையப் பெற்றுள்ளது.

            பிறமொழி இலக்கியங்களில் காணப்பெறும் பாணா்கள் நாடுகளைச் சுற்றி வரும் வாய்மொழிப்பாடும் பாணா்கள் ஆவா்.  சங்க இலக்கியத்தில் சுட்டப்பெறும் பாணா்கள் நாடோடிகளாக வாழவில்லை மாறாக தமக்கெனச் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துள்ளனா். பாணா்களின் வாழ்க்கையானது உரிமையும் பெருமையும் கொண்ட வாழ்வாகும் என்பதை ஆசிரியர் கட்டுரையின் வழி வெளிப்படுத்துகிறார்.

            இன்றைய மொழியியலார் குறிப்பிடும் மொழிக் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.  இன்றைய விஞ்ஞான முறையில் ஆராயும் மொழியியலானது அக்கால இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உள்ளதை அறியும் பொழுது தமிழனுக்கு பெருமைத் தோன்றுகிறது என்பதை கட்டுரையின் வழி வெளிப்படுத்துகிறார் ஆசிரியா்.

            திருக்குறளானது சங்கப் பாக்களின் வடிவத்திலும், அகப்புற உணா்வுகளிலும் வேறுபட்டு நிற்கின்றது.  வள்ளுவா் வழியில் அறிவு முதலிடம் பெறுகின்றது.  உணா்ச்சியானது  இரண்டாம் இடத்தைப் பெறுகின்றது என்பதை, “திருவள்ளுவரின் புரட்சி” என்னும் கட்டுரையின் வழி விளக்கியுள்ளார்.

            தொல்காப்பியம் குறிப்பிடும் உலகத்தோற்றம், உயிர்களின் பாகுபாடு, இடமும் காலமும், ஒலியும் ஒளியும், உயிர்மெய் பெயரிடல், குற்றியலுகரத்தன்மை, எண்களின் பெயர்கள் போன்றவை தொல்காப்பயரின் அறிவியல் பார்வையினை எடுத்துக்காட்டுகிறது.  என்பதை சான்றுகளின் வழி விளக்குகிறார். கா.மீனாட்சிசுந்தரம்

            சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் உளவியல் கோட்பாட்டின் அடிப்படையில் திட்டமிட்டு அமைத்துள்ளார் என்பதை “சிலம்பு உணா்த்தும் பொறுப்புணா்ச்சி - ஓா் உளவியல் கோட்பாடே” என்னும் கட்டுரையின் வழி விளக்குகிறார் ஆசிரியா்.  சிலம்பும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களாகும்.  மணிமேகலைக் காப்பியத்தில் அறம் அறிவுறுத்தலும் சிலப்பதிகாரக் காப்பியத்தில் கோவலனின் படிமத்தினையும், கண்ணகியின் மறுபிறப்பினையும் கட்டுரையின் வழி ஆய்வு நோக்கில் அமைத்துள்ளார்.

            பேரா.கா.மீனாட்சிசுந்தரம் இயற்றிய “தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்” என்னும் இந்நூலானது தமிழ் மொழியின் இலக்கண இலக்கியப் புலமையை வெளிப்படுத்தியமையும் ஆய்வாளா்களை சிந்திக்கும் நோக்கில் அமையப் பெற்றுள்ளமையும் பாராட்டுதற்குரியது.

ஆ.அருள்சாமி

திருக்கோயிலை வணங்கும் முறைகள்


முன்னுரை
          கோயிலுக்குப் போய் இறைவனை வழிபட வேண்டும் என்ற நியதி இல்லை.  தூய்மையான எந்த இடத்திலிருந்தும் தனிமையில் இறைவனைத் தியானிக்கலாம்.  அல்லது வீட்டுப் பூசையறையில் வழிபடலாம், எத்தனை வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் மன ஒருமையுடனும் மன அமைதியுடனும் இறைவனை வழிபடத் தகுந்த மிக மிகப் பொருத்தமான இடம், கோயில்.  கோயிலில் இறைவனை வழிபடத் தகுந்த எல்லா வசதிகளும் இருக்கின்றன.  விதிமுறைகளின் படி குறித்த காலங்களில் பூசைகள், விழாக்கள் முதலியன அங்கு நடைபெறுகின்றது தனித்த நிலை வழிபாடும் கூட்ட நிலை வழிபாடும் அங்கு உண்டு  பசுவின் உடம்பெல்லாம்  பால் நிறைந்திருந்தாலும் அதன் மடியின் வழியாகத்தான் பால் வழிகின்றது.  அதைப்போல நிலத்தின் கீழே எல்லா இடங்களிலும் நீர் பரவியிருந்தாலும், கிணற்றின் வழியாகத்தான் நீர் ஊறுகின்றது.  அதைப் போல இறைவன் எங்கும் நிறைந்து பரவியிருந்தாலும் அவனது பேரருள் வழியுமிடம் கோயில் ஊறிப் பெருகுமிடம் கோயில் அந்தபேரருளைப் பெறுவதற்காக அனைவரும் கோயிலுக்குப் போகத்தான் வேண்டும் பக்தா்களின் உள்ளத்தில் ஊறிப் பெருக கெடுத்தோடுகின்ற பக்தி வெள்ளம், இறைவனது பேரருள் கடலில் சங்கம் ஆவதே உண்மையான ஆலய வழிபாடு

வணக்க முறைகள்

            கோயிலுக்குள் இறைவனை வணங்கும் முறைகள் இரண்டு வகைப்படும். 1.நின்று வணங்கல் 2. கிடந்து அல்லது விழுந்து வணங்கல் என்பனவாகும் அவை

திரியாங்கம்

            தெய்வம், துறவிகள் முனிவா்கள் முதலியவர்களை வணங்கும் போது தலைக்கு மேலும் பெற்றோர், ஆசிரியா் முதலியவா்களை வணங்கும் போது மகத்துக்கு நேரும் உறவினா்கள் நண்பா்கள், விருந்தினா்கள் முதலியவா்களை வணங்கும் போது கழுத்துக்கு நேரும் கைகளைக் குவித்து வணங்குவதும் முறையாகும் கைகள் குவிந்திருக்கும் போது தலை தாழிந்திருக்க வேண்டும்.

பஞ்சாங்கம்
            தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு ஆகிய ஐந்து அங்கங்களும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குவது பஞ்சாங்க வணக்கம் இது பெண்களுககு உரியது

அட்டாங்கம்

            தலை, கை இரண்டு, காது இரண்டு தோள்கள் இரண்டு மோவாய் ஆகிய எட்டு அங்கங்களும் நிலத்திலே பொருந்தும்படி கிடந்து வணங்குவது அட்டாங்க வணக்கம் இந்த வணக்க முறை வழக்கத்தில் இல்லாதது ஆண்களுக்கு உரியது.

சாஷ்டாங்கம்
            சாஷ்டாங்கம் சக + அஷ்ட+ அங்கம் தலை, காது, இரண்டு, மார்பு, கை இரண்டு கால்கள் இரண்டு ஆகிய எட்டு அங்கங்களும் நிலத்திலே பொருந்தும் படி விழுந்து வணங்குவது அஷ்டாங்க வணக்கம் இதுவும் ஆண்களுக் குரியது.

            சாஷ்டாங்க வணக்கத்தைத் “தாண்டமிடுதல் என்று தமிழில் கூறுகின்றனா்.  எந்த ஆதாரமும் இல்லாத தண்டம் (தடி) எப்படி நிலத்திலே விழுந்து விடுமோ அப்படி நிலத்திலே விழுந்து வணங்குவது ”தண்டமிருதல்”ஆகும்.  ஆதரவற்ற தடிக்கு நிலமே அடைக்கலம், ஆதரவற்றவா்களுக்கு இறைவனை அடைக்கலம் என்ற உட்பொருளைச் சாஷ்டாங்க வணக்கம் உணா்ந்துகின்றது.பஞ்சாங்க, அட்டாங்க  வணக்கங்களைக் குறைந்தது மூன்று முறை செய்ய வேண்டும். நிலத்தில் படிந்து வணங்கும் போது முா்த்தங்களை நோக்கிக் கால்களை நீட்டக் கூடாது கொடி மரத்திற்கு அருகில் பஞ்சாங்கமாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கலாம்.  கோயிலின் வேறு எந்தப் பகுதியிலும் விழுந்து வணங்கக் கூடாது.  காரணம் எந்த மூா்ததத்தை நோக்கியவது கால்களை நீண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

            கோயிலுக்குள் நுடைந்தவுடனும், வழிபாடுகளை முடித்துக் கோயிலை விட்டு வெளியே வரும் போதும் கொடி மரத்தருகில் விழுந்து வணங்க வேண்டும் வேறு எப்போதும் விழுந்து வணங்கக் கூடாது. கோயிலில் தெய்வத்தைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது   கோயிலில் அனைவரும் சமம் சாஷ்டாங்க வணக்கம் செய்யும்போது வணங்குபவரின்  மார்பில் படிந்து அவா்களைப் புனிதமாக்க வேண்டும் என்பதற்காகவே ஆலய வழிபாட்டில் சாஷ்டாங்க வணக்கம் செய்ய வேண்டும் என்பது விதிக்கப்பட்டுள்ளது  தொண்டரடிப் பொடிக்கு அத்தனை மகிமை! கொடி மரத்தருகில் விழுந்து வணங்கும் போது கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய சன்னதியானால், வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும் தெற்கு  அல்லது வடக்கு நோக்கிய சன்னிதியானால் கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும் புண்ணியத் திசைகளாக மதிக்கப்படுகின்ற கிழக்கு வடக்கு திசைகளை நோக்கி கால்களை நீட்டி எப்போதும் வணங்கக் கூடாது

            இறைவனை வணங்கும் போது கண்களாகிய வண்டுகள்  அவனது திருவடித் தாமரைகளையே மொய்த்து பேரருள் தேனைப் பருகி, களிப்படைய வேண்டும் பக்தி மயக்கம் கொள்ள வேண்டும்

முடிவுரை
            திருக்கோயிலை எவ்வாறு எல்லாம் வணங்க வேண்டும் என்ற சில விதி முறைகள் உண்டு அவை திரியாங்கம், மஞ்சாங்கம், அட்டாங்கம் சாஷ்டாங்கம் ஆகும் ஆண்கள், பெண்கள் இருபாலா்கும் வணங்கும் விதி முறைகள் வெவ்வெறாக உள்ளது. பஞ்சாங்கம் வணக்க முறை பெண்களுக்கும் அட்டாங்கம் சாஷ்டாங்கம் வணக்க முறை ஆண்களுக்கு உரியது விதிமுறைகள் மூலம் வழிபட்டால் நாமும் எல்லா நன்மைகளையும் பெற முடியும்.

-கு.கங்காதேவி

மகளிரைக் கொண்டாடுவோம்..


           
தி.பி-2048 (கி.பி.2017)                   பங்குனித்திங்கள்(மாா்ச்சு)


தேன்:1  துளி:3                                                                                                            

 மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். இந்நாளைக் கொண்டாடுவதில் எங்கள் “தேமதுரமும்” கைகோர்க்கின்றது.  இன்று ஒரு நாள் மட்டும் மகளிரைக் கொண்டாடுகிறோம். ஆனால் மற்றைய நாட்களில் மகளிரின் நிலை? கள்ளிப்பாலையும் தாண்டி, பிறப்பெடுத்து வந்தால் வளர்கையில் துன்பமே  மிஞ்சுகின்றது..
            இன்று மூன்று மாதக் குழந்தையையோ, மூன்று வயது மழலையோ,  மூவிருபது வயது மூதாட்டியையோ யாரையும் விட்டு வைப்பதில்லை வக்கிரம் பிடித்த சில ஆண்கள்.
            ”மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற கவிமணியின் குரலை இன்று நாம் படித்து பெருமிதம் கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாட்டின் நிலை அப்படி இல்லை.  இன்று கவிமணி இருந்திருந்தால் கூட ”மங்கையராகப் பிறந்தாலே மாபயம் தான் வருகிறதம்மா” என்று பாடியிருப்பார்.
            நினைத்துப் பார்த்தால் வெட்கக்கேடாக இருக்கின்றது.  நமது நாடு எதனை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது? இந்த நிலைக்கு ஆண்கள் மட்டும் காரணமல்ல.. பெண்களும் தான் . எளிதாக இருக்கின்றது என லெக்கீன்ஸ், டாப், ஜீன்ஸ், டீசா்ட் என மாராப்பு மேலாடை இல்லாமல் பெண்களுக்கே கண்ணை உறுத்தும் அளவிற்கு அணிந்து கொள்கின்றனா்.  பிரச்சனைகளையும் எளிதாகவே பெற்றுக் கொள்கின்றனா்.
            இலைமறை காயாக இருக்க வேண்டியதை இன்றைக்குச் சில கேடு கெட்ட இணையதளங்கள் வெட்ட வெளிச்சம் போட்டுக்  காட்டுவதால், எழுச்சி கொண்டு  வாழ்வில் எழ வேண்டிய இவா்கள் இச்சை கொண்டு இதனைக் காண்கின்றனா்.  எனவே இக்கேடு கெட்ட இணையதளங்களைக் காணாமல் இருக்க இளைஞா்கள் முயற்சிக்க வேண்டும்.
            பள்ளி மாணவ, மாணவியரை வைத்து இவா்கள் காதலெனப் படம் எடுப்பதால் நன்றாகப் பள்ளிக்கு சென்று படித்து நல்ல மதிப்பெண் பெறும் பிள்ளைகளும் கல்விப் பாடத்தைத் தவிர்த்து காதல் பாடத்தைக் கற்றுக் கொள்கின்றனா்.  பள்ளி இறுதி ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்றால் தான் எதிர்காலத்தில் நல்ல வேலைக்கான படிப்பில் சேரமுடியும்.  நல்ல வேலையையும் பெற முடியும்.  ஆனால் சில இயக்குநா்கள் தாறுமாறாகப் படம் எடுத்து தரங்கெட்ட மாணவா்களாகவே அவா்களை உருமாற்றி விடுகின்றனா்.
            பெண்கள் பற்றிய ஒரு புள்ளி விவரத்தை அறிந்து கொள்ள நேர்ந்தபோது அதிர்ந்தேன்.  ஏனெனில் ஆபாச தளங்களை இணையத்தில் காண்பதில் ஆண்களை விடப் பெண்களின் விகிதம் அதிகமாம்.  ஓ! பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவா்களோ? புதுமைத் தனமும் இதுவோ?
            பிள்ளைகளை வளா்க்கும் பெற்றோர், ஆரம்ப நிலையிலேயே அவா்களுக்கு நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுத்து வளா்க்க வேண்டும்.  ஏனெனில் அவா்கள் வாழ்வின் இறுதிவரை நல்ல மனிதனாகச் செயல்படுவதற்கு ஆரம்ப நிலையில் நாம் அவா்கள் மனதில் இடும் வித்துக்களே காரணமாகும்.  பள்ளிப்படிப்போடு இளம் பாலகா்களுக்கு கணினி, பிற மொழி திறன், நடனம், இசை எனப் பலப் பயிற்சிகளை அவா்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட ஒழுக்கம் சார்ந்த கல்வியை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
            அறிவியலின்  ஆதிக்கம் நம்மைச் சிலதுறைகளில் முன்னுக்குக் கொண்டு சென்றாலும், சில துறைகளில் எழவே முடியாத பாதாளத்தில் தள்ளி விடுகின்றது.  பெண்களே சிந்தியுங்கள்.. கருணைக்குப் பெயா்போன அன்னை தெரசாவும், விஞ்ஞானத்தில் சாதித்த கல்பனாசாவ்லாவும், ஆட்சியை ஆளுமையுடன் நடத்திய அன்னை இந்திராவும் விளையாட்டில் வெற்றிக் கொடி நாட்டிய சானியா, சாய்னா, சிந்து என சாதனை மகளிரின்  காலத்தில் வாழ்ந்து கொண்டு நாம் சாதாரண பிரச்சனைகளுக்குக் கூட வாழ எண்ணமின்றி சாகத் துடிக்கின்றோம்..  செத்தும் போகின்றோம். வரலாற்றில் நாமும் ஒரு கல்பனாசாவ்லாவாக, அன்னை தெரசாவாக உருவாக நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் போராடுவோம்! வெல்வோம்! எதிர்கால வெற்றியாளர்கள் பட்டியலில் நாமும் இடம்பெறுவோம்! பின் மகளிர் தினத்தை மகத்தான தினமாகக் கொண்டாடுவோம், வாருங்கள்!
-தோழமையுடன்,
ஆசிரியா் குழு



ஆசிரியா்
மு.செண்பகவள்ளி
இணையாசிரியா்

ஆ.அருள்சாமி 

துணையாசிரியா்

கா.சுபா 

ஆசிரியா்குழு

.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

 நெ.கிருஷ்ணவேணி

பெ.குபேந்திரன் 

.சகுந்தலா 

மீனாட்சி



கணினிதட்டச்சு
.லெட்சுமி

தொடா்புமுகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.







பழந்தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல்


முன்னுரை

            விருந்தினா் என்பவா் இக்காலத்தார் கருதுவது போல, உற்ற உறவினா் அல்லா்.  எதிர்பாராமல் பசியால் இல்லம் நோக்கி வருபவரே விருந்தினா் ஆவார். இவா்கள் பழங்காலத்தில் சிறப்பாக உபசரிக்கப்பட்டனா் எனவும் இவா்களுக்கென தனிச்சிறப்பிடம் உண்டு எனவும் பழந்தமிழ் இலக்கியங்கள் சித்தரிக்கின்றன.  பழந்தமிழா்களின் விருந்தோம்பல் பண்புகள் பற்றி ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

            விருந்தினா்க்கெனத் தனியாகச் சிறந்த உணவுகள் தயாரிக்கப்பட்டன.  திணையரிசியும் பாலம் கலந்த பால்சோறு, அவரைப் பருப்பும் அரிசியும் கலந்த பருப்புச்சோறு, இறைச்சியும் அரிசியும் கலந்த “ஊன்துவை அடிசில்” புளியும் மோரும் மூங்கில் அரிசியோடு கலந்து ஆக்கப்பட்ட “புளியங்கூழ்“ ஆகியன சங்ககால உணவு வகைகளுள் குறிப்பிடத்தக்கவை  அரிசிக்களி, அரிசிக் கூழ், அரிசிச் சோறு, அரிசி அவல், அரிசிக்கள் ஆகியன அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்டன.  ஊன் உணவுடம் கள்ளும் இனவேறுபாடின்றி அனைவராலும் உண்ணப்பட்டன.
            உணவில் கள் முதலிடம் பெற்றது கடும் புளிப்புடன் கூடிய கள்  விரும்பி உண்ணப்பட்டது இக்கள்,

            ”தேட்கடுப்பன்ன நாட்படு தேறல்” (புறநா-392)
          ”பாம்பு வெகுண்டன்ன தேறல்” (சிறுபாண் - 237)

எனப் புகழப்படுகிறது.  அரசன் தெளிந்த கள்ளைத் தானுண்டு விட்டுக் கலங்கிய கள்ளை மறவா்க்கும் விருந்தினா்க்கும் அளித்தான்.  மன்னன் மறவரையும் விருந்தினரையும் பாராட்டும் பாணியாக இது விளங்குகிறது கள், உணவு ஆகியவற்றைப் பொற்காலத்தில் அளிப்பது விருந்தினரைப் பேணும் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது.

            தன்னை நாடி வந்த விருந்தினரை நன்கு உபசரித்தான் பல்யானை செல்கெழுகுட்டுவன் வந்த விருந்தினா் இடம் பெயர்ந்து செல்லாமல் இருக்க உண்ண உணவும், ஆட்டிறைச்சியும் கொடுத்தான் ஆட்டிறைச்சி விற்போர் கொத்திச் சிதைத்த கொழுப்பு மிக்க இறைச்சியை வாணிலியில் இட்டுப் பொரிக்கும் போதெல்லாம் கடல்  ஒலிபோல் ஓசையுடன்  கூடிய கருமையான அடிசில் நெய்யாகிய அவதிப்புகை எழும் இதனைப்,

            ”வருநா் வரையார் வார வேண்டி
          விருந்துகண் மாறாது உண் இய பாசவா்
          ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங்குறை
          குய்இடு தோறும் ஆனாது ஆா்ப்பக்
           கடல் ஒலி கொண்டு, செழுநகா் வரைப்பின்
          நடுவன் எழுந்த அடுநெய் அவுதி” (பதிற்-8-14)

எனப் பதிற்றுப்பத்து கூறுகிறது அதவாவது, வந்து விருந்தினா்க்கு காலம் நேரம் பார்க்காமல் எந்நேரமும் விருந்தோம்பல் செய்யப்பட்டது.  எனவும் அதனால் தான் குட்டுவன் அரண்மனையில் எப்போது  பார்த்தாலும் அவுதிப்புகை எழுகின்றன என்ற கருத்தும் புலப்படுகிறது.

            பத்துப்பாட்டில் அமைந்த ஆற்றுப்படை இலக்கியங்கள் விருந்தோம்பும் பான்மையை விரிவாக விளக்கி நிற்கின்றன.  மன்னா் விருந்தினரை வரவேற்று நின்ற பார்வை, புனிற்றா கன்றை நோக்கும் பார்வையுடன் ஒப்பிடப்படுகிறது.  கண்ணால் பருகுவோர்போல் ஆர்வம் கொண்டு வரவேற்று, “ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டும் உள்ளத்தை அவா்கள் பெற்றிருந்தனா் விருந்தினா்களின் பல் மழுங்குமாறு உணவுகள் வழங்கப்பட்டன அவா்களது பாசிவோர் போன்ற துன்னல் ஆடைகள் அகற்றப்பட்டுக் கொட்டைக்கரை உடைய பட்டுடைகள் அளிக்கப்பட்டன.

            ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் தமிழரின் பண்பாடு வந்த விருந்தினரை நாம் விரும்பி ஏற்றுக் கொள்வதன் வெளிப்பாடு இது இப்பழக்கம் பண்டைய சமுதாயத்தில் நடைமுறையில் இருந்துள்ளது.  கரிகாற் பெருவளத்தான் தான் மன்னனாக இருந்தும் தன்னை நாடி வரும் பொருநா் இரவலராக இருந்தும் அவரைப் பெரிதும் மதித்தான் அவா்க்கு வேண்டிய சிறப்புக்ள செய்தான்.

            பொருநா்க்குச் சுடச்சுட இறைச்சியின் வெப்பத்தை ஆற்றும் பொருட்டு வாயின் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கத்திற்கும், வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கத்திற்கும் கறியை வாய்க்குள்ளேயே மாற்றி ஆற வைத்து உண்டனா் பல்லேறு பிழுங்கி போயின கொல்லையை உழும் கொழு உழுது உழுது தேய்ந்ததைப் போல,  கரிகாலன் அருகிருந்து உபசரித்த இறைச்சியை மென்று மென்று பல்லும்   மழுங்கிப் போயின இதனை,

            ”கொல்லை உழுகொழு ஏய்ப்ப, பல்லே
          எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி”  (பெருந-117-118)

என்னும் பாடலடிகள் உணா்த்தும்
     விருந்தினா் திரும்பிச் செல்ல விரும்பின், அவா்களைப் பிரிய மனமின்றி வருந்திப் புலம்பி, வழியனுப்பும் பொழுது நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தோ்வரை எழு அடி தன் காலால் நடந்து சென்று வழியனுப்பினான்.  இதனை,

            ”காலில் ஏழடிப் பின் சென்று”   (பொருந-166)

என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது.
   பண்டையத் தமிழா்கள் வந்த விருந்தினரை உபசரிப்பது மட்டும் அல்லாமல், அவா்களின் பிரிவைக் கூட அவா் விரும்பவில்லை, பின்பு ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பி உள்ளனா்.  என்னும் கருத்து புலரப்படுகிறது.

அறஇலக்கியத்தில் விருந்தோம்பல்

     ”விருந்தினரைப் புறம் தருதல்” என்று பரிமேலழகரும்,  உண்ணும் காலத்துப் புதியார்  வந்தால் பதுத்துண்ண வேண்டும் என்றும் மணக்குடவரும், தம் புதல்வரிடத்து வைக்கும் அன்பைப் போலவே, பிறரிடத்தும் அன்பு வைத்து ஒம்பல் என்று பரிதியும் விருந்தோம்பல் பற்றி விளக்கம் தருகின்றனா்.  சங்ககாலத்தில் பழந்தமிழா்களிடம் காணப்பட்ட விருந்தோம்பல் இக்காலத்தில் ஒரு அறமாகக் கருதப்படுகிறது. தனது இல்வாழ்க்கை சிறக்க வேண்டுமானால் விருந்தோம்பல் மேற்கொள்ள வேண்டுமென திருவள்ளுவா் கூறுகிறார்.
    அனிச்சமலரானது மிகவும் மென்மையானது.  அதனை முகா்ந்தவுடன் வாடிவிடும், ஆனால் அம்மலரை விட மென்மை வாய்ந்து விருந்தினரின் முகமாகும்.  அவா்களை இன்முகத்தோடு வரவேற்க வேண்டும், இல்லையெனில் அம்மலரைப் போன்று அவா்களின் முகமும் வாடிவிடும் என்பதனை,

          ”மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
          நோக்கம் குழையும் விருந்து” (திரு-90)

எனக் கூறுகிறார்.  மேலும் வந்த விருந்தினரை முதலில் போற்றி உணவளித்துப் பின் மிஞ்சும் உணவை உண்டு வாழ்பவா் நிலத்தில் விளையும், விதையும் விதைக்க வேண்டும் என்பதில்லை தானே விளையும்  என்பதை வள்ளுவா்.
            ”வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
          மிச்சில் மிசைவான் புலம்” (திரு-85)

எனக் குறிப்பிடுகிறார்.
            சங்க காலத்தில் விருந்தோம்பல் தமிழா்களிடம் இயல்பாக இருந்தது ஆனால் அற இலக்கிய இக்காலத்தில் அறமாக போற்றப்படுகிறது. விருந்தோம்பல் செய்தால் வீடுபேறு அடைய முடியும் என்பதையும் கருத்தில் கொண்டு விருந்தோம்பலை மக்கள் மேற்கொள்கின்றனா்.

காப்பியக் காலத்தில் விருந்தோம்பல்

            சங்ககாலத்தில் விருந்தோம்புதல் ஒரு சிறந்த கலையாகப் பேணப்பட்டது.  கணவருடன் கூடி வாழும் மங்கல மகளிர்க்குரிய தனி உரிமையாக இது கருதப்பட்டது.  கணவனை இழந்தவா்களும் பிரிந்து வாழ்பவா்களும் விருந்தை எதிர்கொண்டு வரவேற்கும் உரிமை பெறவில்லை கோவலைப் பிரிந்திருந்த கண்ணகி தனக்கு நேர்ந்த இழப்புக்களை நிரல்படுத்தும் போது,

            ”அறவோர்க்கு அளித்தலும், அந்தணர்  ஓம்பலும்,
          துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
          விருந்தெதிர் கோடலும், இழந்த  என்னை” (சிலம்பு:16   71-73)

என்று கூறுகின்றாள். கண்ணகி கோவலன் தன்னை விட்டு பிரிந்துச் சென்றமைக்குக் கூட மனம் வருந்தவில்லை தான் அறநெறியாளா்க்கு, உணவளித்தும், அந்தணா்களைப் பேணுதலும், துறவியரை எதிர்கொண்டு உபசரித்தலும், நம் முன்னோரின் சறந்த நிலையைப் போல வரும் விருந்தினை எதிரேற்று உபசரித்தலும் ஆகிய கடமைகளையெல்லாம்   யான் இழந்தவளாக நிற்கின்றேனே என எண்ணி மனம் வருந்துகின்றாள்.  அக்காலத்தில் விருந்தோம்பல் என்னும் பண்பு மேலோங்கி காணப்பட்டுள்ளது.

முடிவுரை
            அரசராலும், சமுதாய மக்களாலும் விருந்தோம்பப்பட்டவா்கள் முன்பின் அறியாதவா்களாகவே பழந்தமிழா் இலக்கியங்களில் சித்தரிக்பட்டுள்ளனா்.  வருந்தோம்பல் நமது நாட்டின் பண்பாடு ஆகும்.  இயன்றவரை நாம் முன்பின்  தெரியாதவா்களுக்கு விருந்தோம்பல் செய்து நமது நாட்டின் பண்பாட்டைக காத்திட வேண்டும்.
-அ.ரா.பானுப்பிரியா