தலையங்கம்
தி.பி.2049. ஆவணித்திங்கள்
தேன்-2. துளி-20
‘தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை’
ஈரோட்டுப் பள்ளியிலே ஏடெடுத்துக் கற்றுணா்ந்து
பாராட்டுங் காஞ்சிபுரம் பல்கலைசோ் மன்றத்தில்
கற்றுத் தெளிந்து கலைஞா் எனும் பட்டம்
பெற்றுத் திகழும் பெருமை மிகவுடையார்
காற்றடித்த போதுங் கழகம் எனும் விளக்கை
ஏற்றி அணையாமல் எந்நாளும் காக்கின்றார்
இன்றைக் கவா்பெருமை ஏற்றிளங் காளையா்க்கு
நன்ற தெரியாது நாளை புலனாகும்.
-
வீறுகவியரசா் முடியரசன்
‘கலைஞா் என்னும் பொதுச்
சொல் தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சா் திருமிகு. மு.கருணாநிதி அவா்களைக் குறிக்கும்
குறிப்புச் சொல்லாகவே மாறிவிட்டது.
திராவிட இனத்தின் பேராளி,
பெரியாரியத்தின் போர்வாள், தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவா், நாளுக்கு நான்கு மணிநேரமே
உறங்கி தமிழகத்தை விழிக்கச் செய்த ஓய்வறியாச் சூரியன், ‘என் உயிரினும மேலான’ எனும் ஒற்றைச் சொற்றொடரால் ஐந்து தலைமுறைகளையும்
கவா்ந்திழுத்த சொல்வேந்தன், நெசவாளா்களின் ‘பட்டுத்தறி’ , மீனவா்களின் ‘கட்டுமரம்’,
சாதி மதங்கடந்த ‘சதம்துவபுரம்’, குரலற்றவா்களின் ‘முரசொலி’ காவிரி டெல்டாவின் ‘காவல்
தலைவன்’, திருநங்கை சொல் ஈந்த ‘தீயாகத் தீபம்’ தொல்காப்பியப் பூங்கா தந்த ‘சொல்காப்பியன்’
தமிழக அரசியலின் தனித்துவ அச்சாணி, ஐந்து முறைமுதல்வரான பொன் விழாத் தலைவன், இன்னும்
இப்படி இலைபோன்ற அயிரமாயிரம் புகழாரங்களுக்கு உரிமையும், தகுதியுமுடைய கலைஞா் அவா்களின்
மறைவு தமிழிற்கும், தமிழகத்திற்கும் ஈடுசெய்ய இயலாப் பேரிப்பே..
கலைஞரின் அளப்பெரும்
பணிகளை அடுக்கினால் விரிவு பெருகுமென்பதால் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளில் சிலவற்றை
நினைவு கூர வேண்டியது தமிழ்ப்பண்பாடு மைய ஆய்வாளர்கள் எங்கள் பொறுப்பும், கடமையம் ஆகும்.
· மனோன்
மணியம் சுந்தரனாரின் ‘நீராடும் கடலுடுத்த’ பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில்
பாடும் வழக்கத்தை 1970-இல் ஏற்படுத்தினார் - கலைஞர்
· தமிழ்த்தாய்கு
கோயிலெழுப்ப 23.04.1975-இல் காரைக்குடி கம்பன் மணிமண்டப வளாகத்தில் கால்கோள் இட்டு
21.04.1993 திறந்துவைத்து சிறப்புச் செய்தவா் - கலைஞா்
· கன்னியாகுமரியில்
133 அடியுயர திருவள்ளுவரின் திருவுருவச்சிலையமைத்தும், திருவள்ளுவா் பெயரைப் பல்கலைக்கழகத்திற்கு
சூட்டியும், சென்னையில் வள்ளுவா் கோட்டம், கண்ணகி சிலை, உருவாக்கத்திலும் தகைசால் பணி
செய்தவா் - கலைஞா்.
· தமிழ்
ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவா் ஆண்டு என்று பெயா் வைத்தும் இவா் முயற்சியே..
· ஆசியாவின்
மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியவா் - கலைஞா்
· இயல்,
இசை, கூத்து என்னும் முத்தமிழ்க் கலைகளை வளா்க்க ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் பழந்தமிழரின்
கலை, பண்பாட்டிற்குப் புத்துயிர் ஊட்டியவா் - கலைஞா்
· மாணவப்
பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் முன்னின்று, ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப்
பத்திரிகையை நடத்தினா்.
· குறளோவியத்
தொல்காப்பிய உரை, சங்கத்தமிழ் உள்ளிட்ட 178 நூல்களைப் படைத்தளித்தார்.
· தமிழ்
மொழியை நடுவண் அரசு 12.10.20004 அன்று அறிவிக்க அயராது உழைத்து, கோவையில் ‘உலகத் தமிழ்
செம்மொழி மாநாடு’ நடத்தினார்.
· தமிழச்சான்றோர்
பெயரால் விருது, தமிழறிஞா்களின் பிள்ளைகளுக்குப் படிப்பில் முன்னுரிமை வழங்கியவா்.
· தனியார்
பேருந்துகளை நாட்டுடைமையாக்கி சேரன், சோழன், பாண்டியன், பல்லவன், திருவள்ளுவா் பெயா்களில்
போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கியவா்.
· திரைப்பட
வசனத்தில் அழகுதமிழை நடமாட வைத்தவா்.
· தை
முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அரசாணையாக்கி அறிவித்தவா்.
· தம்
வாழ்நாள் முழுக்க தமிழ்வளா்ச்சிக்கு அரும்பாடுபட்டவா்.
இன்னும் இவைபோன்ற பல்வேறு தமிழ்த் தொண்டாற்றிய கலைஞருக்கு நடுவண் அரசு ‘இந்திய மாமணி’ (பாரதரத்னா) விருது
வழங்கிப் பாராட்ட வேண்டும்.
கலைஞரின் தமிழ்ப் பணிகளை
இளைய தலைமுறையினா் கற்றறிந்து அவா் வழியில் மொழி வளா்ச்சிக்குத் தொண்டாற்ற முனைப்போடு
செயலாற்ற வேண்டும் இது வே கலைஞரின் தமிழ்த் தொண்டிற்கு இளையோர் ஆற்றும் கைம்மாறு.
பாவேந்தா் கூறியது
போல் ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ கலைஞரும் வள்ளுவா் கோட்டத்தில் பூம்புகார்
சிலப்பதிகார கலைக்கூடத்தில், சமத்துவ புரங்களில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அண்ணா
அறிவாலயத்தில், வானுயர உயா்ந்து நிற்கும் வள்ளுவரின் சிலையில் ஏழை- எளியோரின் குடிசைகளில்,
ஒட்டுமொத்த தமிழா்களின் உள்ளங்களில் தமிழாய் நிலைத்திருப்பார்.
தோழமையடன்,
தேமதுரம் - ஆசிரியா்குழு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக