சனி, 29 செப்டம்பர், 2018

பழிக்கு ‘பலி’


பழிக்கு ‘பலி’
          அண்ணஞ்சார் அறிவாலயம் - 108 ஆண்டுகள் கடந்த பாரம்பரியமிக்க அரசு உதவி பெறும் தொடக்கபள்ளி.
          பள்ளியின் தாளாளராகவும் தலைமையாசிரியராகவும் இருந்த ஆசிரியா் பாலுவை மக்கள் எல்லோரும் பாசமுடன் ‘அண்ணாசார், அண்ணன்சார்’ என்றழைத்ததால் ‘அண்ணாஞ்சார் பள்ளிக்கூடம்’ என்ற பெயரே மக்கள் மனதில் நிலைத்துவிட்டது.
          ‘ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்’ என்ற பழமொழியை ஆசிரியா் பாலு பொய்யாக்கினார்.  அவரது செல்வங்களே அவரது ஐந்து பெண் பிள்ளைகள்தான் . எழுத்தாளராக, பேச்சாளராக, பள்ளித் தாளாளராக, சமூக சேவகராக, இயற்கை மருத்துவராக ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிகரம் தொட்டார்கள்.
          மக்கள் கூடுகிற இடத்தில், சாலையோரத்திலிருந்த அண்ணஞ்சார் அறிவாலயத்திற்கு குழிதோண்டுவதற்கு கண்கொத்திப் பாம்பாய் காத்துக் கிடந்தார்கள் சில பொறாமைக்காரா்கள்.
          திரும்பும் திசையெல்லாம் விழுங்கி ஏப்பம் விடக் காத்துக்கிடந்த அஞ்சகரையும் சமாளித்து புகழ் மிக்க பள்ளியாக தூக்கிச் சுமந்து கொண்டிருந்தார் தாளாளா் சுவேதா பன்னிரு பட்டங்களைப் படித்து முடித்தவா்.  பெயருக்குப் பின்னால் தொடா்வண்டி போல பட்டப்படிப்புகள் அணிவகுத்து நிற்கும்.
          ஓா் ஆண் போல பள்ளிக்கூடத்தை ஒற்றையாளாய்க் கட்டி ஆளும் சுவேதாவிற்குக் கூடவேயிருந்து குழி பறிக்கவும் ஆளிருந்தது.
          ‘வேலை வாங்க சிலருக்குப் படிப்பு கைகொடுக்கிறது.  வேலையில் பெயா் வாங்கி சிலருக்கு நடிப்பை கைகொடுக்கிறது’ என்று யாரோ ஓா் அனுபவசாலி சொன்னது பலவிடங்களில் பலநேரங்களில் உண்மையாகத்தானிருக்கிறது. பிள்ளைகளைப் பள்ளியில் சோ்க்க ஆசிரியைகள் ஊா் ஊராய் அலைந்த போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி வீட்டிலிருக்கும் ஜெயா, பள்ளியில் சேர்க்கைக்காக வரும் பிள்ளைகளிடம், பெற்றோரிடம் உதவுவது போல் பேசி தான் தான் நிறைய பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தாய் தாளாளரை நம்ப வைத்தவா்.  அதே சமயத்தில் சேர்ந்த பிள்ளைகளிடம், பெற்றோரிடம் நிர்வாகத்திற்குத் தெரியாமல் பள்ளியைப் பற்றிக் குறைகளைச் சொல்லி பிள்ளைகளிடத்தில் அக்கறையுள்ளவளாய்க் காட்டிக் கொண்டு மாற்றுச் சான்றிதழைப் பெற்றோரை வாங்கச் செய்து தனக்கு கமிஷன் தரும் வேறொரு தனியார் பள்ளியில் சோ்ந்து எல்லோரிடமும் சமூக சேவகராய் முகம் காட்டிக் கொள்ளும் தோ்ந்த அரசியல்வாதி.
          தன்னைவிட வயதில் இளையவள் தனக்கு மேலிடத்திலிருப்பதைப் பொறுக்கமுடியாமல் எரிமலையாய் குமறிக்கொண்டிருந்தாள்.  அவளைக் காலமாக்கும் காலத்திற்காய்க் காத்திருந்தாள் ஜெயா,
          கூகையைக் காக்கை வெல்லும் காலமும் வந்தது.  தன்னோடு இன்னும் இருவரைச் சேர்த்துக்கொண்டு வலை விரித்தார்கள். இது எதுவுமே தெரியாமல் சதாசா்வகாலமும் பள்ளியைப் பற்றியும், படிக்கும் பிள்ளைகளைப் பற்றியுமே நினைத்துக் கொண்டிருந்தாள் சுவேதா.
          வழக்கம் போலவே அன்று சுவேதா அறைக்குள் நுழைந்ததும் ஓடி வந்து கையைப் பிடித்துக்கொண்டு “மிஸ்.. கலாம் தாத்தாவைப் பார்க்கக் கூட்டிட்டுப் போறீங்களா என்னனைய.. “சிரித்துக்கொண்டே கெஞ்சினான் மாற்றுத்திறனாளி மாணவனான மதிவாணன்.  “கட்டாயம் கூட்டிப் போறேன்டா தங்கம்.  இப்போ வகுப்புக்குப் போங்க” சலிப்பில்லாமல் பதில் சொல்லி சிரித்தபடி அனுப்பி வைத்தாள்.
          எதிரே வந்த ஜெயாவிடம் “மிஸ்.. நானும் சுவேதா மிஸ்ஸீம் கலாம் தாத்தாவைப் பார்க்கப் போறோமே..” என்ற மதிவாணனிடம் “தொலைஞ்சா நல்லது வந்துடாதீங்க” எரிந்து விழுந்தாள்.  மதிவாணன் ஒன்றும் புரியாமல் அடுத்த ஆசிரியரிடம் அதே தகவலைச் சொல்ல உறசாகமாய் ஓடினான்.
          பள்ளிக்கூட கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு தானே மனமுவந்து ஐந்துலட்ச ரூபாய் தருவதாக தாளாளரிடம் சொல்லிவிட்டு, காவல்துறையில் இலஞ்சம் கேட்டு மிரட்டுவதாகப் புகார் தந்திருந்தாள்.  இதோ இராசாயனப் பவுடா் தடவிய ரூபாய் நோட்டுகளைத் கொண்டு செல்லும் போதுதான் எதிரே இந்த மதிவாணனின் குறுக்கீடு.
          அறைக்குள் நுழைய எத்தனித்தவளின் அலைபேசி சிணுங்கியது.  எடுத்துப் பார்த்தாள், கணவன் அலைபேசி எண்.  எடுத்துப் பேசினாள் ‘ஹலோ.. என்னங்க..’ மறுமுனையில் அதட்டலாய் ஒரு குரல் “ஏம்மா.. சேகரோட சம்சாரம் ஜெயாவா,” “ஆமா சார். நீங்க?” “உடனே புறப்பட்டு டவுன் போலீஸ் ஸ்டேசன் வாம்மா. உம் புருசன் கவா்ண்மென்ட பணத்தைக் கையாடல் செஞ்சு கையும் களவுமா மாட்டிக்கிட்டான்.  உங்கிட்டயும் விசாரிக்க வேண்டியிருக்கு,  டீச்சர்ங்குறதாலதான் போன்ல சொல்லேறன் வேறயாரும்னா கான்ஸ்டபிள அனுப்பி கையோட கூட்டிட்டுவரச் சொல்லி இருப்பேன்”
          எதிர்முனையில் சொல்லச் சொல்ல ஜெயாவிற்கு தலைசுற்றியது கைகால் உதறியது.  “சார் நீங்க?” “இன்ஸ்பெக்டா் மதிவாணன்” “என்ன சொன்னீங்க?” “இன்ஸ்பெக்டா் மதிவாணன்” கத்திச் சொன்னார் கையிலிருந்த ரூபாய் நோட்டுகள் நழுவிச் சிதறின அதில் காந்தி சிரித்துக்கொண்டிருந்தார்.
-முனைவா் ம.ஸ்டீபன்மிக்கேல் ராஜ்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக