வியாழன், 30 ஆகஸ்ட், 2018

விடுதலை


விடுதலை

பண்பு நிறை பார்வையாளா்களுக்கு,
          பணிவுநிறை நல்வணக்கம்.  நான் தான் உங்கள் கண்கள் பேசுகிறேன்.  ‘கண்களால் எப்படிப் பேச முடியும்?  “கண்ணுக்கு வாயா இருக்கிறது? என்று ஆறாம் அறிவை அவசரப்பட்டு அழைத்து விடாதீா்கள்.
          வண்டமிழ்நாட்டில் பலரது வாய்களுக்கே வாய் முளைக்காத போது, உங்கள் கண்களுக்கே வாய் முளைத்திருக்கிறதென்று பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்.
          அண்மையில் பதினொரு வயது சிறுமியைப் பதினேழுபோ் நாசம் செய்ததை தொலைக்காட்சிகள் வழக்கம்போல விவாத மேடைபோட்டு டி ஆா் பி பந்தயத்தில் முந்துவதற்கு போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  பேசுவதால் தொலையுமென்றால் பேசித் தொலையட்டும்.
          இதைப்பார்த்துவிட்டு வழக்கம் போலவே வடநாட்டு எச்சையொருவன் “குற்றம் செய்யத் தூண்டிய அந்தப் பெண்தான் குற்றவாளி.  வெளியில் அவளுக்கென்ன வேலை? வீட்டுக்குள்ளிருந்தால் இது நடந்திருக்காதில்லையா?”என்றோ, தென்னாட்டு நாடகமாடி ஒருவன்  ‘வேண்டுமென்றே ஒரு சாதாரணப் பெண்களும், எழுத்தாளா்களாக வியாக்கானம் பேசும் பெண்களும், ஒருவேளை அந்தப் பெண்ணைப் போல தங்கள் வாழ்க்கையில் விபத்தைச் சந்தித்திருக்கலாம்’ என்றோ  காவிக்குள் ஒளிந்துகொண்ட கறைவேட்டி கொடும்பாவி கூத்தாடிகள கூட்டறிக்கையும் விடலாம்.
          தங்கத் தமிழா்கள் வழக்கம் போலவே எல்லாவற்றையும் செய்திகளாய்ப் படித்துமுடித்து, வழக்கம் போலவே ‘உச்’ கொட்டி எடுத்து மடித்து, வழக்கம் போலவே பிக்பாஸில் இந்த வாரம் என்ன நடக்குமென்று நாட்டு நலனில் நாட்டம் கொண்டு இன்னொரு ஓவியாவிற்காய்ப் படைதிரட்டக் காத்திருக்கலாம். வாழ்வதற்கே மல்லுக்கட்டும் விவசாயிகளைப் புறம் தள்ளி ஜல்லிக்கட்டில் ‘தமிழன்..டா’ போடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டு மிருக்கலாம்.
          கண்ணெதிரே நடக்கும் கொடுமைகளைக் கண்டும் காணாதது போலிருக்க உங்களால் முடியும்.  ஆனால் உங்கள் கண்களாகிய என்னால் எப்படி முடியும்? நல்லது, அல்லது, வலியது, மெலியது, பெருமை, சிறுமை, உறவு, பகை, நட்பு, துரோகம் எல்லாவற்றையும் உங்களுக்குக் காட்டிக் கொடுப்பவன் நான்.  ஆனால் இவற்றைப் பிரித்தறியாத மூளையை மூலையில் மூடிவைத்து என்ன சாதித்துவிட்டீா்கள்? சொத்து பத்தும், சொகுசு வசதிகளுமா?  அவையெல்லாம் எட்டுவழிச்சாலைகளால் எப்பொழுது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம்.  பிறகு பிள்ளைகளா? குற்றத்தின் பிடியிலும் குற்றவாளியின் வலையிலும் சிக்கிக்கொள்ள நீங்களே வழி காட்டியிருக்கலாம்.
          உங்கள் நினைவில் இருக்கிறதோ இல்லையோ? எனக்கு எல்லாம் நினைவிலிருக்கிறது  பல வீடுகளில் ‘அவன் ஆம்பளை, அவன்கூட பொட்டக் கழுத போட்டி போடலாமா?  பொம்பளப் புள்ள வாசல்ல நிக்கலாமா? அம்பளப் பய.. எப்படியிருந்தாலும் ஊா் தப்பா பேசாது’  இப்படிக்கு பேசி பேசியே பெண்பிள்ளைகளைக் கோழைகளாக்கி சாவுக்கிரையாக்கியவா்களும். ஆண் பிள்ளைகளைப் பொலிமாடுகளாக்கி கொம்பு சீவி ஊரார் பிள்ளைகளை நாசம் செய்தவைத்தவா்களும் பெற்றோரா? தேசத் துரோகிகளா?
          தன் பிள்ளையால் ஊரார் பிள்ளைகளும், ஊரார் பிள்ளையால் தன் பிள்ளைகளும் பலிகடா ஆவதற்கு ஆணாதிக்கத்தை நஞ்சூட்டி வளா்த்தவா்கள், பெண்கள் மதிக்கக் கற்றுக் கொடுக்கத் தவறியவா்கள் எப்படி குற்றவாளிகளோ அதைப் போலவே கண்ணை உறுத்தும்படியாக உடம்போடு உடம்பாய் ஒட்டிக் கொண்ட, உடலழகை வெளிக்காட்டும் உடைகளை அணியவைத்து வெளியில் உலவவிடும் பெற்றோரும் குற்றவாளிளே..
          பிள்ளைகள் சீக்கிரத்தில் வளா்ந்துவிடுகிறார்கள்.  பெற்றோர்தான் வளா்வதே இல்லை.  ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்று புறநானூற்றில் படியதைத்தான் ‘உதவி செய்யாட்டியும் உபத்திரம் செய்யாத’ என்று உங்கள் தாத்தா - பாட்டிகள் உங்களிடம் சொல்லிக் சொல்லி வளா்த்திருக்கிறார்கள்.  இதுபோன்ற நீதிநெறிகளையும் பிள்ளைகளுக்குப் பாசத்தோடும் பாலோரும் சேர்த்து ஊட்டுங்கள்.
          நீங்கள் உங்கள் இமைச்சமாதிகளை மூடிக்கொண்டு மனசாட்சியைப் புதைத்துக் கொண்டு நல்லடக்கமாகிவிட்டீா்கள்.. தயவு செய்து தேவைப்படும் நேரங்களிலாவது உங்கள் இல்லங்களிலும் தொடங்கி வையுங்கள்..
          வீட்டிற்கு சரி.. நாட்டிற்கு? அடித்தட்டு மக்களை அழுத்துகின்ற பிரச்சனைகளை நினைவில் நிறுத்தி ஓட்டு இயந்திரத்தில் அழுத்துங்கள்  கொடுங்கோலரின் நெஞ்சழுத்தத்திற்கு உங்கள் உரலழுத்தத்தில் பதிலடி கொடுங்கள்.  இதுதான் விடுதலை.  இதுவே விடுதலை இப்படிக்கு, உங்கள் கண்கள்.
-முனைவா்.ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக