தி.பி.2048 (கி.பி.2017) புரட்டாசி திங்கள்
தேன் - 1
துளி-9
வீறுகவியரசா் முடியரசனார்க்கு வெள்ளணி நாள்
காலத்தை வென்ற வீறு கவியரசா்
தந்தை பெரியார்
அவா்களால் ‘கவிஞன் யார்?.. என்பதற்கு எடுத்துகாட்டுத் தானய்யா பகுத்தறிவுக் கவிஞா்
முடியரசன்’ பேரறிஞா் அண்ணா அவா்களால் ‘திராவிட நாட்டின் வானம்பாடிக் கவிஞா் முடியரசன்’
என்றும், பாவேந்தர் பாரதிதாசன் அவா்களால் ‘என் மூத்த வழித் தோன்றல் முடியரசனே.. எனக்குப்
பிறகு கவிஞன்.. முடியரசன்’ என்று உள்ளம் நெகிழப் பாராட்டப் பெற்றவா்தான் வீறு கவியரசர்
முடியரசன்.
தமிழ்க் கவிதையுலகில் பாரதியைத் தன் பாட்டனராகவும்,
பாரதிதாசனைத் தன் தந்தையாகவும் கருதி மரபு வழுவாமல் புதுமைகளைப் புகுத்திப் பாட்டிசைத்த
பாவலா் - கவியரசா் முடியரசன் ஆவார். தமிழ்,
தமிழா், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதி-சமய மறுப்பு, சமூக - பொருளாதார விடுதலை, குமுகாய
மறுமலா்ச்சி ஆகிய தளங்களில் ஒரே நேர்கோட்டில் நின்று புதுமைக் கவிதைகள் படைத்த புரட்சிக்
கவிஞா்கள்தான் பாரதி - பாரதிதாசன் - முடியரசன் ஆகியோர்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பாரதி
‘இந்தியம்’ பாடினார். அவா் பின் வந்த சுப்புரெத்தினம்
பாரதிக்குத் தாசனாகி இந்தியம் பாடினாலும், காலத்தின் தேவையால் பின்னா் ‘திராவிடம்’
பாடினார். இவா்களின் கவிவழித் தோன்றலாக வந்துதித்த
துரைராசு (முடியரசனாரின் இயற்பெயா்) எவருக்கும் தாசனாகாமல் பேரால் முடியரசன் பேரிடா்கள்
உற்றாலும் பேரா முடியரசனாய், ‘தமிழியம்’ பாடினார்.
‘பாரதியார் இக்கவிஞருக்குப் பாட்டனார்; பாரதிதாசனார் இக்கவிஞருக்குத் தந்தை போன்றவர். அப்பெருங்கவிஞா்களுடைய வழியில் சென்று ஒவ்வொரு
விதத்தில் அவா்களையெல்லாம் வென்றுவிட்டார் முடியரசனார்’ என்று முடியரசனார் பற்றி டாக்டா்.அ.சிதம்பரனார்
14.4.1960 இல் வழங்கிய பொன்னுரை இங்கு குறிக்கத்தக்கது. (கவியரங்கில் முடியரசன்.ப.9)
தாய்மொழியின் மீதும், தமிழினத்தின் மீதும்
தீராப் பற்று கொண்டிருந்த முடியரசனார் மொழிக்கும், இனத்திற்கும் இழுக்கும் நேரும்போதெல்லாம்
பொங்கியெழுந்து மொழி, இனங்காக்கத் தம் பாட்டினை படை ஆயுதமாய் ஏந்தினார்.
ஊருக்கு மட்டும் உபதேசிக்கும் போலிப் புலவராய்
வார்த்தை வேறு; வாழ்க்கை வேறு என்றிராமல் தான்
பாடியபடியே கொள்கை நெறி மாறாமல் சுயமரியாதையோடு வள்ளுவநெறிப்படி வாழ்ந்து காட்டினார். தனது பெயரை (துரைராசு) முடியரசன் என்றும், தன் துணைவி
பெயரை (சரசுவதி) கலைச்செல்வி என்றும் தமிழ்ப்படுத்த
தம் பிள்ளைகளுக்கும் தமிழில் பெயர்சூட்டி மொழிப் பற்றூட்டி வளா்த்தார். தான் மட்டுமல்லாமல், தம் பிள்ளைகள் அறுவர்க்கும்
சாதி மறுப்பு திருமணம் செய்வித்தார். தவத்திரு.
குன்றக்குடி அடிகளார் கவிஞர் பற்றிக் குறிப்பிடும் பொழுது “சாதி ஒழிய வேண்டும் எனக்
கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞா்களுள் அவற்றைத் தம் வாழ்வில் கடைப்பிடித்தவா்
கவிஞா் முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா எனத் தெரியவில்லை” என்றுரைத்தார்.
யாருக்காகவும், எதற்காகவும் தாம் கொண்ட கொள்கை
நெறியினின்று கிஞ்சித்தும் பிறழாமல், ஏழ்மை நிலை வந்துற்ற போதும் பதவி, பணம், புகழுக்காக மானமிழந்து எவரிடமும் மண்டியிடாத
தன்மானக் குணக்குன்றாய்த் திகழ்ந்தார். எனவேதான்
மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவா்கள் “கவிஞா் முடியரசன் ஓா் அற்புதக் கவிஞா். பொருளீட்டுவதற்காக ஆபாசங்களையும், அருவிருப்புகளையும்
பாடும் கவிதாசா்களிடையே முடியரசன் வேறுபட்டு நின்று மனித முன்னேற்றத்துக்காகவும், தமிழா்
விடுதலைக்காகவும், தமிழரின் அடிமை விலங்கை உடைக்கவும் பாடிய புரட்சிக்கவிஞராக நான்
காண்கிறேன்” என்று பாராட்டினார்.
முடியரசனார்க்கு
முடிசூட்டிய விருதுகள்
தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு,
(முடியரசன் கவிதைகள் - 1966, வீரகாவியம் - 1973) நல்லாசிரியா் விருது (1974), ‘பாவேந்தா்’
விருது (1987), ‘கலைமாமணி’ விருது (1998) ஆகியவற்றையும், தவத்திரு குன்றக்குடி அடிகாளரிடம்
‘கவியரசு’ (1966), ‘சங்கப் புலவா் (1976) பட்டங்களையும், உலகத் தமிழ்க் கழகத்திடம்
‘பாவரசா் (1979) பட்டத்தையும், தமிழகப் புலவா் குழுவிடம் ‘தமிழ்ச் சான்றோர்’
(1983) விருதையும், அண்ணாமலை அரசா் நினைவு அறக்கட்டளையின் சிறந்த தமிழ்த் தொண்டிற்கான
‘அரசா் முத்தையவேள்’ நினைவுப் பரிசையும் (1993), ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவையிடம்
‘இரண்டாம் புரட்சிக் கவிஞா்’ பட்டத்தையும் (1994), அகில இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியா் மன்றத்திடம் ‘கல்வி
உலகக் கவியரசு’ விருதையும் (1996) பெற்றள்ள கவியரசா் முடியரசனாரின் 27 நூல்களும் தமிழக
அரசால் (2000) நாட்டுடைமையாக்கப்பட்டுள்ன.
கவிஞரின் பல கவிதைகள் சாகித்திய அகாதமி அமைப்பு
இந்திய மொழிகளிலும், ஆங்கில, இரஷ்ய மொழிகளிலும் மொழி பெயர்த்துள்ளதோடு ‘இந்திய இலக்கியச்
சிற்பிகள்’ எனும் வரிசையில் முனைவா் இரா.மோகன் எழுதிய முடியரசன் வாழ்க்கை வரலாற்றை 2005-லும் கவிஞரின் மூத்த மைந்தா்
பாரி முடியரசன் தொகுத்த ‘முடியரசன் கவிதைகள் முத்துக்கள்’ நூலை 2015-லும், கவிஙரின்
மூத்த மைந்தா் பாரி முடியரசன் தொகுத்த ‘முடியரசன் கவிதை முத்துக்கள்’ நூலை 2015லும்
வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர்கல்வி பாடநூல்களில்
எட்டு முதல் பதினொரு வகுப்பு பாடநூல்களிலும் சென்னை மாநிலக் கல்லூரி பாடத்திட்டத்திலும்
கவிஞரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
07.10.1920 இல் பெரியகுளத்தில் பிறந்த வீறு
கவியரசா் முடியரசன் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில்
ஆசிரியராய், தன் மானக் கவிஞராய், தமிழியப் புரட்சிக் கவிஞராய், பெருமிதக் கவிஞராய்
தமிழ்க் குமுகாயத்திற்குத் தொண்டாற்றி 03.12.1998-இல் காலத்தோடு காலமாய் கலந்தார். “புண்படாத நேரம் இருந்ததில்லை, புழுக்கம் படாத நொடி
இருந்ததில்லை, ஆனால்- கொள்கைக்கு விடுமுறை கொடுத்துவிட்டுக் குனிந்து எவா் முன்னும்
நின்றதில்லை முடியரசன். முடியரசன் பெருமித
உயரம் எந்த இமயத்திற்கும் இல்லை, முடியரசு வெப்பம் எந்த சூரியனுக்கும் இருப்பதில்லை”
என்ற கவிஞர் ஈரோடு தமிழன்பனின் வரிகள் கை தொழும் கவியரசா் முடியரசனார்க்கு காரைக்குடியில் நினைவு மண்டபம்
எழுப்பிட வேண்டும் தமிழகப் பல்கலைக்கழகங்கள் ஏதேனும் ஒன்றிக்கு கவியரசா் பெயர் சூட்டிட
வேண்டும். கவியரசா் முடியரசனார் பெயரில் தமிழ்
ஆய்வு இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும் முடியரசனாரின் படைப்புகள் பரவலாக்கப்பட வேண்டும்
என்பன போன்ற தமிழ்ச்சான்றோரின் நீண்ட நாள்
கோரிக்கைகளை அறிஞா்களும், அதிகாரிகளும் முன்னெடுத்துச் செல்ல தமிழக அரசும், தமிழ்கூறு
நல்லுலகும் நிறைவேற்றிட வேண்டும்
தோழமையுடன் ,
தேமதுரம் ஆசிரியா்குழு,
ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
இணையாசிரியர்
பெ.குபேந்தரன்
துணையாசிரியர்
கா.சுபா
ஆசிரியர் குழு
இரா.கார்த்திக்
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி
தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.
தொலைபேசி:04565-223255
தொலைபேசி:04565-223255
தமிழ வாழ்வே தன் வாழ்வாய் வாழ்வாங்கு வாழ்ந்த வீறு கவியரசர் முடியரசன் கவியாலே முத்தமிழுக்கும் முடி சூட்டுவோம்
பதிலளிநீக்குNanru
பதிலளிநீக்குவண்டமிழ் காத்திட்ட சிங்கம்
பதிலளிநீக்குவாழ்வினில் வழுவாத தங்கம்
பண்ணினை வாரிவாரி வழங்கி
பாரிலே கொள்கையொடு வாழ்ந்தோன்
மண்ணினில் தமிழாகத் தமிழர்
மனமெலாம் அரியணை செய்வோன்
எண்ணினில் கொணடிடுவோம் வணங்கி
வீறுகவி முடியரசே இறையாய்@
-கெங்கை பாலதா
சின்னகலையம்புத்தூர்.