வியாழன், 21 செப்டம்பர், 2017

நல்லதொரு குடும்பம்

நல்லதொரு குடும்பம்
          ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்குள் ஓட்டமும், நடையுமாய் மற்றவர்களை முந்திச்சென்று கொடைக்கானல் பேருந்தில் ஏறினான் மதன்.  நான்கு நாட்கள் தொடா் விடுமுறையால் பேருந்து இருக்கை முழுவதும் நிரம்பியிருந்தது. ‘இவ்வளவு வேகமாய் வந்தும் பயனில்லையே..’ என்று ஏமாற்றத்தில் மீண்டும் ஒரு முறை நோட்டமிட்டான்.
          ஒட்டுநா் இருக்கைக்குப் பின்புறம் மூன்றுபேர் இருக்கையில் இரண்டு அருட்சகோதரிகள் அமா்ந்திருந்தார்கள்.  நான்கு மணிநேரம் நின்றுகொண்டு போவது சிரமம்.  ‘அருட்சகோதரிகள் உடன் பிறந்த சகோதரிகள் போலதான்.. ஓரமாய் உட்காந்து கொள்ள அனுமதி கேட்டால் நிச்சியம் மறுக்க மாட்டார்கள்  என்ற  நம்பிக்கையில் அருகே போய் உட்கார அனுமதி கேட்க அவா்களும் சம்மதித்தார்கள்.  பேருந்தில் நிறைய பேர் தூய சலேத் அன்னை திருவிழாவிற்காக குடும்பத்துடன் பயணம் செய்தார்கள்.
          தனக்கு அடுத்துப் பின்னிருந்த இருக்கையில் அழுது அடம்  பிடித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அமைதிப்படுத்த அவன் பெற்றோர் அவனுக்கு பல வித்தைகள் காட்டி முயன்றுகொண்டிருந்தார்கள்.  அவா்களின் முயற்சிகள் எல்லாம் ஜி.எஸ்.டி வரிக்கு எதிராய் புலம்பிய நடுத்தர மக்களின் நாதியற்ற குரலாய் நீர்த்துப் போனது நேரஞ் செல்லச் செல்ல அழுகையும் அடம்பிடித்தலும் அதிகரித்துக்கொண்டு போனது மனிதனுக்கு எரிச்சலாய் இருந்தது பிள்ளையா? இல்லை பிசாசா? என்று வாயக்குள் முனங்கிக் கொண்டான் எத்தனை வாங்கித் தந்தும், எத்தனை வேடிக்கை காட்டியும் எல்லாவற்றையும் தூக்கி எறியும் தலைக்கனம் சுற்றியிருந்தவா்களுக்கெல்லாம் ஆத்திரத்தைக் கிளப்பியது.
          ‘இது மாதிரி புள்ளைகள் பெத்துக்குறதுக்கு பேசாம கல்யாணமே வேண்டாம்னு இருந்துருக்கலாம்.  பின்னிருந்து அவா்கள் காதில் விழும்படியாக பேசிக்கொண்டார்கள்.  ஆற்றாமையில் அந்தச் சிறுவனின் அப்பா தன் மகனை அடித்து நொறுக்கிவிட்டார்.  ‘ஈவு இரக்கமேயில்லாம இப்படியா மாட்ட அடிக்குற மாதிரி பச்சப் புள்ளய்ப் போட்டு அடிக்குறது.  மனுசனா? மருகமா? மீண்டும் பின்னிருந்து அதே குரல்.
          ‘என்ன செய்தாலும் விமர்சிக்கிற மன நிலை தொலைக்காட்சி விவாதங்களால் மக்களுக்கு கூடிப்போய்விட்டதோ?’ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
          அடிவாங்கி அலறிய சிறுவனை அவன் அம்மா அணைத்துக்கொண்டு சமாதனப்படுத்தினார்.  அப்படியும் சமாதனமாகாமல் அடித்தவா் மன்னிப்பு  கேட்ட பிறகு அழுகை ஓய்ந்தது.  ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் நின்றுகொண்டு குதிப்பதிம், முன்னும் பின்னும் அமா்ந்திருந்தவா்களை வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.  பேருந்தில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லையென்ற கவலையை அந்தச் சிறுவன் தன் சேட்டைகளால் தீர்த்துவைத்துக் கொண்டிருந்தான் ‘நம்மையும் இப்படித்தானே வளா்த்திருப்பார்கள்’ மனசுக்குள் நெருஞ்சி  முள்ளாய் ஏதோ குத்தியது போலிருந்தது.
          “அப்படியே நம்ம ஐயப்பன் மாதியே அடம்பிடிக்கிறான்ல..” அருட்சகோதரிகள் பேசிக்கொண்டார்கள்.  அவா்கள் பேசிக் கொண்டது மதனுக்கும் கேட்டது “சிஸ்டா்.. யார் அந்த ஐயப்பன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?
          “எங்க அன்பகத்துல எட்டாம் வகுப்பு படிக்கிற பையன்” என்றார் ஒரு சகோதரி. “எட்டாம் வகுப்பு படிக்கிற பையனா இப்படி அடம் பிடிப்பான்” சந்தேகமாயக் கேட்டான் மதன்.  “இவனவிட பத்துமடங்கு அதிகம் சேட்டை பண்ணுவான் நாங்க தியானத்துக்குக் கிளம்புநோம்னு சொன்னதும், ‘அப்போ கொடியேத்துறதுக்கு  நீ இருக்க மாட்டியா கிறிஸ்டி, தேவியும் வருதா, நாங்களும் வர்றோம்’னு ஒரே அழுகை, சமாதனப்படுத்தி விட்டுட்டு வர்றதுக்குள்ள  போதும் போதும்னு ஆகிடுச்சு அவன் மட்டுமில்ல சரண்யா, அமலன், போதுமணி, நீதி, சக்கிவேல்னு  எல்லோருமே அடம் பிடிச்சு, சேட்டை பண்ணுவாங்க.  அதே அளவுக்கு பாசமாகவும் இருப்பாங்க.. அவா்கள் மன வளா்ச்சியில்லாதவங்கனு சொல்றது தப்பு, கடவுளோட செல்லப் பிள்ளைங்க எங்களுக்கும் செல்லப் பிள்ளைங்கதான்.  பத்துநாளு ரொம்பவே அவங்க எல்லாரையும் மிஸ் பண்றோம்” வருத்தப்பட்டார் மற்றொருவா்.
          ஆச்சிரியமாய் இருந்தது மதனுக்கு நல்ல புத்தியோடு இருக்கும் பிள்ளைகளுக்கே இந்தக் காலரத்தில் பாடம் நடத்தமுடியாத சூழலில்  சிறப்புக் குழந்தைகளுக்கு எப்படித்தான் பொறுமையாக, அன்பாக சொல்லிக் கொடுக்கிறார்களோ.. அதுவும் துறவற வாழ்க்கையில் பெற்றவா்கள், உடன் பிறப்புகளை, ஊரை, உறவுகளை விட்டுப் பிரிந்திருப்பது எப்படித்தான் முடிகிறதோ? அதற்கெல்லாம் தனி மனப்பான்மை வேண்டும்.
          “உங்க வீடுகளுக்கு அடிக்கடி போக முடியுமா சிஸ்டா்? ” கேட்டான் மதன்
          “ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை போக அனுமதி கிடைக்கும்.  ஏதாவது முக்கியமா போயே ஆகனும்னா அனுமதி கேட்டு போய்ட்டு வரலாம்”
          “குடும்பத்தையே பார்க்காம எப்படித்தான் இருக்க முடியுது உங்களால..”
          “யார் சொன்னா? குடும்பத்தையே பார்க்க முடியலன்னு .  தினம் தினம் நாங்க பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்.  எங்களைச் சுத்தியிருக்குறவங்க எல்லாரும் எங்க குடும்பம் தான்.  இவங்கள நாங்க பார்த்துக்கிருவோம் அவங்கள கடவுள் பார்த்துக்கிடுவாரு”
          வாயடைத்துப் போய் நின்றான் மதன்.  காலையில் சாப்பிட்டுக் கிளம்பச் சொன்ன அம்மாவை, பத்திரமாகப் போய்ட்டு வரன்னு சொன்ன அக்காவை தாமதமாய்க் கிளம்பிய அவசரத்தில் எரிந்து விழுந்து காயப்படுத்திய மனசுக்குள் காட்சியாய் ஓடியது.
          அருட்சகோதரிகளின்  சகிப்புத்தன்மையும், அன்பும் மனசுக்குள் மலையளவு உயா்ந்து நின்றது விட்டுக் கொடுப்பதும், கடைசிவரை விடாமல் இருப்பதும் தானே குடும்பம்’, அம்மாவிடமும், அக்காவிடமும் மன்னிப்பு கேட்க அலைபேசியை எடுத்து அழைக்கத் தொடங்கினான் மதன்.
-ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக