திங்கள், 21 மே, 2018

அழகப்பா பல்கலைக்கழகத்தை அரியணையில் அமா்த்திய துணைவேந்தா்


அழகப்பா பல்கலைக்கழகத்தை அரியணையில் அமா்த்திய துணைவேந்தா்
(தேசிய அளவில் பல சாதனைகள் புரிந்துள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்கள் ‘கல்வி டுடே’ இதழுக்காக அளித்த சிறப்பு நேர்காணல் )     






1.தங்கள் பெற்றோர், கல்வி, இளமைப் பருவம் குறித்துக் கூறுங்கள் ..
பதில்:
               எனது பெற்றோர் (திரு.சொக்கையா அம்பலம், திருமதி சரோஜா) பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. நான் பிறந்த ஊர் பெரிய பட்டமங்கலம் (ஆவுடையார்கோவில் தாலுகா). அந்நாளில், சாலை மற்றும் மின்சார வசதிகள் இல்லாத சிறிய கிராமமாகும். நான் 5-ஆம் வகுப்பு வரையில் எனது பக்கத்து ஊரில் உள்ள ஓராசிரியர் பள்ளியில் தான் பயின்றேன்.  உயர்நிலைப் பள்ளியினை எனது ஊரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன்பேத்தி என்ற ஊருக்கு நடந்தே சென்று பயின்றேன்.  அப்பள்ளிக்கு ஒரு கீற்றுக் கொட்டகை மட்டும்தான். பெரும்பாலும் மரநிழலில்தான் வகுப்புகள் நடக்கும். நான் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது (எஸ்.எஸ்.எல்.சி.- Last Batch) அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லை.  அந்தப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டையில் புகுமுக வகுப்பில் எனது பாடப் பிரிவினை தேர்வு செய்தது அக்கல்லூரி முதல்வர் அவர்கள்.  நான் 11-ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருந்ததால் அவர் Natural Science பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கச்சொல்லி அந்தப் பாடப்பிரிவினை ஒதுக்கினார்கள். நான் புகுமுக வகுப்பில் 58% மதிப்பெண்கள் பெற்றிருந்தேன், 60% இல்லாத காரணத்தால் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இயலவில்லை.
2.  அழகப்பா கல்லூரியல்  படிக்கின்ற காலத்தில் துணைவேந்தராவீர்கள் என்று எண்ணியதுண்டா? தங்கள்
இலக்கு என்னவாக இருந்தது?
பதில்:
               அழகப்பா கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் துணைவேந்தர் ஆவோம் என்று எண்ணியதில்லை.  அக்கல்லூரியில் பட்டமளிப்பு விழாவின் போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்கள். அவருக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை மற்றும் சிறப்பைப் பார்த்து ஆட்சிக்குழு உறுப்பினராக ஆக வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
               வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் நான் எந்த இலக்கும் அமைத்துக் கொள்ளவில்லை.  நான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணம் என் தந்தைக்கு இருந்தது. ஆகவே, B.Sc விலங்கியல் பாடப்பிரிவில் சேர்ந்து படித்தேன் (அக்காலத்தில் பி.எஸ்.சி. முடித்தவர்களும் மருத்துவக் கல்வி பயிலலாம் என இருந்தது). முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சென்னை M.M.C. கல்லூரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால் M.B.B.S. கிடைக்கவில்லை. நான் ஆட்சிக்குழு உறுப்பினராகி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பொழுது துணைவேந்தர்களுடன் பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது துணைவேந்தர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

3. அண்மைக் காலங்களில் பொறியியல் துறையிலிருந்து கலை, அறிவியல் கல்வி நோக்கி மாணவர்களின் கவனம் திசை திருப்பியிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:
               மாணவர்கள் எப்போதும் எந்தத் துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதோ அந்தத் துறையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். தற்காலத்தில் தமிழகத்தில் 552-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதும், மேலும் பல துறைகள் பொறியியல் கல்லூரிகளில் இருந்தும், பணிக்குத் தேவையான திறமை மற்றும் தகுதிகள் மாணவர்களிடத்தில் குறைவாக இருப்பதால் பொறியியல் படித்தவர்களால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. ஆகவே, பொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது அரிது என்ற மாயை உருவாகி உள்ளது.  ஆகவே மாணவர்களின் கவனம் பொறியியல் துறையிலிருந்து கலை, அறிவியல் கல்வி நோக்கி திசை திரும்பியிருக்கிறது.

4. தேசிய அளவில் நம் தமிழகத்தில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை விகிதம் எப்படியிருக்கிறது?
பதில்:
               தேசிய அளவில் உயர் கல்விச் சேர்க்கை பெறுவோரின் எண்ணிக்கை (Gross Enrolment Ratio) சராசரி 23.6 சதவீதமாக இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் உயர் கல்வி பயில்வோரின் சராசரி 49.69% என்ற அளவில் உள்ளது.  தேசிய அளவில் தமிழகத்தில் தான் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகமாக உள்ளது.

5.            துணைவேந்தராகப் பொறுப்பேற்கும் பொழுது, “தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவிடம் பெற்ற A கிரேடு மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்வேன்” என்று அறிவித்தீர்கள்.  ஆனால் சொன்னதற்கும் மேலாக A+ கிரேடு அளவிற்கு  புள்ளிகள் பெற்று பிரமிக்க வைத்தீர்கள்.  இச்சாதனை எப்படிச் சாத்தியமாயிற்று?
பதில்:
               துணைவேந்தராகப் பொறுப்பேற்கும் பொழுது தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் தர நிர்ணயத்தில் A+ தகுதி பெறுவது எனது இலக்கு என்று தெரிவித்திருந்தேன். அதே போல தமிழகத்தில் A+ தகுதி பெற்ற ஒரே பல்கலைக்கழகமாக அழகப்பா பல்கலைக்கழகம் விளங்குகிறது.  தற்போதைய தர நிர்ணயத்தில் NAAC விதிமுறைப்படி A++ அளவிற்கான (3.64) புள்ளிகள் பெற்றதால் Category - ஐ என்ற அந்தஸ்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் - பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது.  இதன் காரணமாக UGC MHRD- இன் தன்னாட்சி அங்கீகாரமும் கிடைத்துள்ளது (Autonomous Status).
               A+ தகுதி பெறுவது எங்களது இலக்காக இருந்ததால், A+ தகுதி பெற்றால் என்ன, என்ன நன்மைகள் கிடைக்கும், பிற சிறப்புத் தகுதிகள் என்னென்ன கிடைக்கும் போன்ற விபரங்களை ஆசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள், மாணவர்கள், கல்லூரி முதல்வர்கள் என அனைவரிடமும் எடுத்துக் கூறியதால், அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தோம். மேலும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் சிறப்பான வழிகாட்டுதல் இருந்ததாலும் இந்தியாவில் இதற்கு முன் A+ தகுதி பெற்ற பல்கலைக்கழகங்கள் என்னவெல்லாம் செய்திருந்தார்களோ அவற்றையெல்லாம் பின்பற்றி இப்பல்கலைக் கழகத்தில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திய காரணத்தாலும் A+ தகுதி கிடைத்தது.

6. துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பிறகு உங்கள் முன்பிருந்த சவால்கள் என்னென்ன? அவற்றை எப்படி ஜெயித்தீர்கள்?
பதில்:
               ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் பல பிரச்சினைகளும் கோரிக்கைகளும் இருந்தது.  குறிப்பாக அலுவலர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்விற்காக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அவர்கள் 10 ஆண்டிற்கும் மேலாகப் பதவி உயர்வு இல்லாமல் இருந்தார்கள்.  அவர்களை அழைத்துப் பேசி நீதிமன்ற வழக்குகளை வாபஸ் பெற்றால், முறையாகப் பதவி உயர்வு வழங்கப்படும் என உறுதியளித்து, அதன் அடிப்படையில் அவர்களை நீதிமன்ற வழக்கினை வாபஸ் பெற வைத்தேன்.  பின்னர் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதே போல் ஆசிரியர்களுக்கும் CAS (Career Advancement Scheme) திட்டத்தின் கீழ் பதவி உயர்வு நிலுவையில் இருந்தது. ஆசிரியர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் முறையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
               NAAC குழுவின் வருகைக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைவாக மேற்கொள்ளும் பொருட்டு காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டது.
               மாணவர்களுக்குப் புல வாரியாக (Faculty wise Library) நூலகம் தேவைப்பட்டது.  மைய நூலகமும் வெளி நாடுகளில் உள்ளது போல், நூலகரைச் சார்ந்து இல்லாமல், மாணவர்களே தங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தாங்களே எடுத்து சென்று படித்துவிட்டு நூலகத்திற்குள் வராமல் நூலகத்தின் நுழைவாயிலில் உள்ள “Dropper” மூலமாக திரும்ப ஒப்படைக்கும் ஆட்டோமேசன் (Automation) வசதி செய்து தரப்பட்டது. மேலும் மாணவர்களுக்குத் தேவையான விடுதி வசதி, Wifi - வசதி இன்னும் பிற தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.  இதனைத் தவிர குறைதீர்க்கும் கூட்டங்கள் (Grievance Redressal Committee Meeting) வாயிலாக மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்து குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டன.
               நான் துணைவேந்தராக பதவியேற்பதற்கு முன்னர் சுமார் 2 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி நிரப்பபடாமல் இருந்ததால், அந்த 2 ஆண்டுகள் பணியும் சேர்த்துச் செய்ய வேண்டி இருந்தது.  இதுவரையிலும், தமிழகத்தில் எந்த ஒரு பல்கலைக்கழகமும் பெற்றிராத A+ தகுதி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. பல்கலைக்கழக வேலை நேரத்தினை ஆரம்பத்தில் ஒரு மணி நேரமும், பிறகு 2 மணி நேரமும் அதிகப்படுத்த வேண்டியிருந்தது. இதற்கு ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் மத்தியில் ஆரம்பத்தில் எழுந்த எதிர்ப்புகளைச் சமாளித்து அவர்களை விருப்பத்தோடு பணியாற்ற வைப்பது ஒரு பெரும் சவாலாக இருந்தது.

7. துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பிறகு தாங்கள் மேற்கொண்ட பல்கலைக்கழக வளர்ச்சிப் பணிகள் என்னென்ன?
பதில்:

(i)            தேசியத் தர நிர்ணயக் குழுமத்தின் மூன்றாவது சுற்றுத் தரமதிப்பீட்டில் நான்கிற்கு      3.64 புள்ளிகள்          பெற்று A+                தகுதியைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு மாநிலப்பல்கலைக்கழகங்களிலேயே காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்தான்        முதன் முதலாக A+ தகுதியைப் பெற்றுள்ளது.
(ii)            பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் மனித வள மேம்பாட்டு     அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக நிதி          நல்கைக் குழுவால் முதல் தர வகை பல்கலைக்கழக அந்தஸ்தையும் (Category I Status) பெற்றுள்ளது. தமிழக மாநிலப்                பல்கலைக்கழகங்களில் அழகப்பா பல்கலைக் கழகம் மட்டுமே இத்தகுதியைப்  பெற்றுள்ளது. 
(iii)           தேசியத் தர நிர்ணயக் குழுமத்தின் மூன்றாவது சுற்று தரமதீப்பீட்டில் நான்கிற்கு 3.64 புள்ளிகள்  பெற்று A+                தகுதியைப் பெற்றதால் RUSA இரண்டாம் தொகுதியில், உயா்  ஆராய்ச்சிகள்           மேற்கொள்வதற்காக ரூ.150 கோடி                பெறுவதற்கான சிறப்புத் தகுதியினை அழகப்பா     பல்கலைக்கழகம் மட்டும் பெற்றுள்ளது.
(iv)           மேலும், இப்பல்கலைக்கழகம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின்      அறிவிப்பின்படி        தன்னாட்சி அந்தஸ்தும்                பெற்றுள்ளது.
(v)           NIRF-2018 தரவரிசைப் பட்டியலில் இந்திய அளவில் 27-வது இடத்தை      இப்பல்கலைக்கழகம் பெற்றது.
(v)           புதிதாக 16 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
(vi)           ஆராய்ச்சி நிதியைப் பன்மடங்கு உயர்த்தியது.
(vii)          பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை.
(viii)         தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு       பணப்பரிசு               மற்றும் சான்றிதழ்                வழங்குதல்.
(ix)           மைய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கும் ஸ்வச்சதா தர வரிசையில்      2017-இல் நாடெங்கிலும்                உள்ள      உயர்கல்வி நிறுவனங்களிடையே மூன்றாம் இடம்      பெற்றது.
(x)           மைய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கும் ஸ்வச்சதா தர வரிசையில் 2017-ல் நாடெங்கிலும் உள்ள உயர்கல்வி              நிறுவனங்களிடையே மூன்றாம் இடம் பெற்றது.
(xi)           பத்மபூசன் டாக்டர் ஆர்.எம்.அழகப்பச் செட்டியார்  அவர்களின் அளப்பரிய கல்விச் சேவையினை அனைவரும் அறிந்து                கொள்ளும் வகையில் வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.
(xii)          தமிழ்ப் பண்பாட்டினை மேம்படுத்தவும், தமிழ் கலாச்சாரத்தினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில்                பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொடங்கப் பெற்றுள்ளது.
(xiii)         5 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு வகையான பூச்செடிகள், மூலிகைச் செடிகள், 500க்கும் மேற்பட்ட அலங்காரச் செடிகள்                மற்றும் 1500 எண்ணிக்கையிலான மா, வேம்பு, தேக்கு, மகாகனி, சிவப்பு சந்தனம், வாகை, வேங்கை, சப்போட்டா,                தென்னை, உள்ளிட்ட மரங்கள் உள்ள தாவரவியில் பூங்கா அமைத்தது.
(xiv)         அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்களின் திறனை மேம்படுத்த தன்னார்வப் பயிலும் வட்டத்தை ஏற்படுத்தியது.                 அதன் மூலம் தற்போது 1500க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று, 154 மாணவர்கள்  UPSC, TNPSC, SET/NET,               BRB, Railway மற்றும் பல துறைகளுக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை      வாய்ப்பைப் பெற்றுள்ளனா்.
  
8.            தங்கள் பதவிக் காலத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி      அங்கீகாரம் கிடைத்த செய்தியறிந்ததும் எப்படி    உணர்ந்தீர்கள்?
பதில்:
               அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அங்கீகாரம் கிடைத்த செய்தியறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றேன். உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக இப்பல்கலைக்கழகத்தை எடுத்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் தேசிய அளவில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். தமிழகத்தில் தன்னாட்சி பெற்ற 3 பல்கலைக்கழகங்களில் முதல் தர அந்தஸ்து (Category -I) மற்றும் A+ தகுதி பெற்ற ஒரே பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகம் மட்டும் தான். மேலும், அகில இந்திய அளவில் முதல் தர அந்தஸ்தைப் பெற்ற 12 அரசு பல்கலைக்கழகங்களில் 2-ஆவது இடத்தில் அழகப்பா பல்கலைக்கழகம் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விசயமாகும்.  இச்செய்தியினை அறிந்ததும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த மகிழ்ச்சியான செய்தியை ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரிடமும் பகிர்ந்து கொண்டேன்.

9.மற்ற பல்கலைக்கழகங்களில் இல்லாது அழகப்பா பல்கலைக்கழகத்திற்கே உரிய    தனிச்   சிறப்புகள் என்னென்ன?
பதில்:
               மேற்சொன்ன சிறப்புகளை அடைவதற்குக் காரணம், இலக்குகளை அமைத்துக் கொண்டு பயணித்தது. இலக்குகளை அடைவதற்குக் காரணம், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் என அனைவரும் பல்கலைக்கழக வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டு பணியாற்றியது. துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றுவதும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நிர்வாகத்தின் மீது அக்கறை கொண்டு முழு ஒத்துழைப்பு நல்குவதும்,  மேலும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பல்கலைக்கழக வளாச்சிகளுக்கும், சாதனைகளுக்கும் நல் ஆலோசனைகள் வழங்கி ஊக்கப்படுத்துவதும் தனிச்சிறப்புகளாகும்.
               காரை மாநகரில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை, சாதனைகளை செய்தித்தாளில் பிரசுரித்தும், தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்தும் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அனைவரும் அறிந்து கொள்ள உதவுகின்றனர்.  அவர்களும் பல்கலைக்கழக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை மேற்கொள்கின்றனர்.
               அழகப்பா பல்கலைக்கழகத்தில் குறை தீர்க்கும் குழுக் கூட்டம் (Grievance Redressal Committee Meeting) அடிக்கடி தேவையான நேரத்தில் நடத்தப்பட்டு அதன் வாயிலாகப் பல்கலைக்கழக மாணவர்களின் குறைகள் நிவர்த்தி ஆவதோடு, உட்கட்டமைப்பு வசதிகளும் பெருகுகிறது.  வருடா வருடம் Happiness Audit நடத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனா் என்ற முடிவு வந்திருக்கிறது.  எங்கள் பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் போல் Green Campus ஆக இருப்பது தனிச் சிறப்பு. பணியாளர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஒரு குடும்பம் போல் விட்டுக் கொடுத்து பணியாற்றுவது மிகுந்த சிறப்புக்குரிய செய்தியாகும்.
               மாற்றுத் திறனாளிகளுக்கென தனித்துறை அமைக்கப்பட்டுள்ளது.  இத்துறையின் வாயிலாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சியும், அவர்தம் பெற்றோருக்கு தக்க ஆலோசனையும் வழங்கப்படுகிறது.  தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி இத்துறையின் கீழ் முதல் முறையாக துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
               மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு மையம் (PARA Sports Centre) தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் முதல் முறையாக இப்பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.  இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 73 தங்கம், 56 வெள்ளி, 48 வெண்கலப் பதக்கங்களை தேசிய மற்றும் மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பெற்றுள்ளனர்.  இம் மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர் திரு. செல்வராஜ், கனடாவில் நடைபெற்ற உலக அளவிலான குள்ளர்களுக்கான ஈட்டி எறிதல்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். மேலும், மூன்று மாணவர்கள் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
               விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒலிம்பிக் / பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றால் 10 லட்சம், சர்வதேச அளவில் வெற்றி பெற்றால் 7 லட்சம், ஆசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றால் 4 லட்சம், தெற்காசிய போட்டிகளில் வெற்றி பெற்றால் 3 லட்சம், இந்திய அளவில் வெற்றி பெற்றால் 0.5 லட்சம் என பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் முடிவு செய்து அறிவித்துள்ளோம். உலக சாம்பியன்சிப் போட்டியில் வெற்றி பெற்ற திரு.எம். செல்வராசுக்கு ரூபாய் 7 லட்சம் ரொக்கப் பரிசும், சான்றிதழும் முதல் முதலில் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
               பல்கலைக்கழக மற்றும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கும் பொருட்டு அழகப்பா பல்கலைக்கழக தன்னார்வ மையம் (Study Circle) துவங்கப்பட்டுள்ளது.

10. இன்றைய இளைய தலைமுறையைப் பார்க்கும் பொழுது தங்களுக்கு என்ன  தோன்றுகிறது?
பதில்:
               இன்றைய இளைய தலைமுறையினரை ஒரு பக்கம் பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது. மறுபக்கம் வருத்தமாகவும் உள்ளது.  நான் மாணவனாக இருந்தபோது கிடைக்காத பல வசதிகள் இப்போது உள்ள மாணவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. கையில் உள்ள மொபைல் போன் மூலம் ஒரு நொடியில் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கின்றனர். எந்தத் தகவலை வேண்டுமானாலும் உடனடியாக இணையதளம் வாயிலாகப் பெற முடிகிறது. அந்தக் காலத்தில் ஆசிரியர்(கள்) மட்டுமே மாணவர்களுக்கு தேவையான விபரங்களை மற்றும் கருத்துக்களை தரக்கூடியவர்களாக இருந்தார்கள் (Teacher were the only source of information to the students).  மாணவர்களின் கல்வி, ஆசிரியரை மட்டுமே சார்ந்த கல்வியாக இருந்தது.  ஆனால், இன்றைய சூழலில் ஆசிரியரை மட்டும் சார்ந்து இராமல் இணையதளம் வாயிலாக மாணவர்கள் பல அரிய விபரங்களைத் தெரிந்து கொள்கின்றனர் (Teachers are the one of the sources for getting information).   
               இப்பொழுது உள்ள தலைமுறை இளைஞர்கள், நமது கலாச்சாரம் மற்றும் தமிழ்ப்பண்பாட்டின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளாமல் மேலை நாட்டுக் கலாச்சார மோகத்தில் மனித உறவுகளின் தேவைகளை அறியாமல் உள்ளனர்.  மேலும், அடுத்தவர் மீது அன்பு செலுத்துவது, பெற்றோர் மற்றும் பெரியோர்களை மதித்து நடப்பது, விருந்தினர்களை உபசரிப்பது, விட்டுக் கொடுத்து வாழ்வது, மனிதநேயத்தோடு பழகுவது போன்ற நற்பண்புகள் குறைந்து வருகிறது. நமது பாரம்பரிய விழாக்களைக் கொண்டாடுவதும் குறைந்து வருகிறது. கல்வி என்பது வேலை பெறுவதற்கு மட்டுமே என்ற குறுகிய நோக்கோடு பயணிக்காமல் நற்பண்புகளைக் கற்றுக் கொள்வதோடு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பாடப்புத்தகங்களைத் தாண்டி நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்ளும் வகையிலும், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், அவர்கள் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

11.           தங்கள் வாழ்க்கை சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகும்.  வாழ்க்கையில் முன்னேற            விரும்பும் மாணவர்களுக்குத் தாங்கள் கூறும் அறிவுரை யாது?
பதில்:
               பழமையை மறக்காமல், புதியனவற்றைக் கற்றுக் கொண்டு இலக்கு அமைத்து, இலக்கின் மீது நம்பிக்கை வைத்து, கடின முயற்சி மேற்கொண்டால் வாழ்க்கையில் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. புதிதாகச் சாதிக்க நினைக்கும் போது தோல்வி பயமின்றி தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். எல்லாத் துறைகளிலும் பணி வாய்ப்புகள் இருக்கிறது.  வேலைக்கான தகுதி மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  நிறுவனங்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்காக சிறப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ்கள் பெற்று வேலைக்கான தகுதியை வளர்த்துக் கொண்டால் எளிதில் நல்ல சம்பளத்தோடு கூடிய வேலைகள் பெறலாம். வேலை கிடைத்தவர்கள் பணிபுரிகிற நிறுவனம் அல்லது கம்பெனிக்கு நம்பிக்கை உள்ளவர்களாக, நம்மால் அந்த நிறுவனம் வளர்கிறது, நாம் அந்த நிறுவனத்தால் வளர்கிறோம் என்ற எண்ணத்தோடு பணியாற்ற வேண்டும். Excellence is the best way for Job Security என்பார்கள்.

12.கல்வி டுடே இதழ் குறித்து …….

               கல்வி டுடேயில் இடம் பெறும் கல்வித் துறையில் சாதித்தவர்களின் கட்டுரைகள் மற்றும் கருத்துக்கள் இளைஞர்களைச் சாதிக்கத் தூண்டும் வகையில் உள்ளது.  மேலும், இதில் இடம் பெறும் செய்திகள் மிகவும் தரமானதாக, மாணவர்களையும், கல்வியாளர்களையும் கவரும் வண்ணம் கருத்துச் செறிவு நிறைந்ததாகவும் உள்ளன.

 

கல்விடுடே இதழுக்காக நோ்காணல் செய்தவா்கள் : பேரா.சே.செந்தமிழ்ப்பாவை, எழுத்தாளர் பாரி முடியரசன்,
ஆசிரியா்கள்  ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ், இரா.வனிதா








                                                                                                                தேமதுரம் இதழுக்காக

ஆசிரியா் குழு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக