பக்கங்கள்

செவ்வாய், 14 மார்ச், 2017

சிவமும், சிவராத்திரியும்


சிவ வழிபாடு

            சைவ சமயத்தைச் சார்ந்தவா்கள் இறைவனைச் சிவன், சிவம், சிவபெருமான் என்னும் பெயா்களால் போற்றி வழிபடுகின்றனா்.  இவ்விறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களைப் புரிகின்றான் மக்களிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை நீக்கி வீடுபேறு அடையச் செய்கின்றான்.  சிவவழிபாடானது உலகம் முழுவதிலும் சிறந்து விளங்கியது என்பதனை ”ஆசியாவில் சியால் என்பது தொன்மைமிக்க நகரம் ஆகம்.  அங்குள்ள ஹிட்பைட் என்ற நாட்டின் நாணயத்தில் சிங்க ஊா்தியில் அம்மனும், இடப ஊா்தியில் சிவனும் உள்ள நாணயம் கிடைத்துள்ளது” இதன் மூலம்  சிவ வழிபாடானது பழங்காலந்தொட்டே உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருத்தமையை அறிய முடிகிறது.  ”சிவன்” என்னும் சொல்  ”எளிதில் நலம் தருபவன்” எனப் பொருள் தரும்.

லிங்க வழிபாடு

            சைவ சமயத்தின் முக்கியக் கொள்கை சிவலிங்க வழிபாடாகும்.  இச்சிவலிங்கத்தில் உறுப்புகளை உடையது உருவம் ஆகும்.  உறுப்புகள் இல்லாமல் இருப்பது அருவம்.  இவ்விரு தன்மைகளையும் உடையது அருவுருவம் இவற்றுள் சிவலிங்கம் அருவுருவத் திருமேனியாக விளங்குகின்றது என்பதனை, ”காணாத உருவினுக்கு முருவினுக்கும் காரணமாய் நீணாகம் மணிந்தார்க்கு நிழற்குறியாஞ் சிவலிங்கம்” என்ற பெரியபுராணப் பாடல்வரிகள் விளங்குகின்றன.  மேலும் ஆண், பெண் சோ்க்கையே பண்டைக் காலந்தொட்டு இலிங்கமாக அமைந்துள்ளது என்பதனை,

            ”சக்தியுஞ் சிவமுமாய தன்மை இவ் வுலகமெல்லாம்
          ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயா்குண குணியுமாக
          வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இல்வாழ்க்கை யெல்லாம்
          இத்தையும் அறியார் பீடலிங்கத்தின் இயல்பும் ஒரார்”

என்ற சிவஞான சித்தா் பாடலின் மூலம் அறியலாம். பிரமாவும், விஷ்ணுவும் தங்களிடம் யார் பெரியவா் என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக தோன்றினார் சிவபெருமான்.  அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் இன்று வரை சிவபெருமானை லிங்க உருவத்திலேயே தான் வழிபடப்பட்டு வருகின்றனா். அவ்வாறு வழிபாட்டுக்குறிய லிங்கங்கள் பல வகையாகப் பகுக்கலாம். அவை, 1.சுயம்புலிங்கம், 2.தெய்வீக லிங்கம் 3.அா்ஷலிங்கம், 4.மனுஷ்ய லிங்கம், 5.கூணிக லிங்கம், 9.புஷ்பலிங்கம், 10.கோசாக்ரு லிங்கம், 11.வாலுக லிங்கம், 12.யவா கோதுமாசா பிஜ்ஜலிங்கம், 13.சீதா கண்டலிங்கம், 14.லவணலிங்கம்,  15.திலாப்சிஷ்த லிங்கம் 16.பாம்சலிங்கம், 17.கூடலிங்கம் அல்லது சீதா லிங்கம் 18.வன்சங்குர லிங்கம், 19.பிஷ்டா லிங்கம், 20.ததிதுக்த லிங்கம்,  21.தாண்ய லிங்கம், 22. பழலிங்கம், 23. தாத்ரியலிங்கம், 24. நவநீத லிங்கம், 25. கரிக லிங்கம், 26.கற்பூரலிங்கம், 27. ஆயஸ்காந்த லிங்கம், 28.மவுகித்த லிங்கம், 29. ஸ்வர்ண லிங்கம், 30. ராஜத லிங்கம், 31.பித்தாலா லிங்கம், 32.திராபு லிங்கம், 33.ஆயச லிங்கம், 34.சீசாலிங்கம், 35.அஷ்டதாது லிங்கம், 36.வைடுா்ய லிங்கம்,  37. ஸ்படிக லிங்கம்,  38. பாதரச லிங்கம்.

நடராசா் வழிபாடு

            சிவ பெருமானின் ஐந்து தொழிலை விளக்குவதே இவரது தாண்டவமாகும். நடராச உருவத்தில் துடி வைத்திருக்கும் கை ஆக்கல் (சிருஷ்டி)  தத்துவத்தை விளக்கும்.  துடியிலிருந்து ஒலிகள் ஒலிகளிலிருந்து உலகம், அபயகரம்  காத்தல்  (ஸ்திதி) அனல் கொண்ட மற்றொரு  கை அழித்தல் (சம்மாரம்) நாட்டப்பட்ட கால் மறைத்தல் (திரோதானம்). இது ஆன்மாவைப் பாசத்தில் கட்டும் தூக்கிய கால் இங்குச் சரண் புகுந்தார்க்கு வீடு என்று அருளைக் காட்டும் (அனுக்கிரகம்)என்ற ஐந்தாம் தத்துவம்.  நாட்டிய காலின் கீழே அடக்கி வைத்திருக்கும்  முயலகன் என்ற அரக்கன் மலத்தைக் குறிக்கும்.  இவ்வைந்து தொழில்களையும் சிவபெருமான் தம் பேரின்ப எழுச்சியிலேயே இருந்து செய்து வருவதால் இந்த தாண்டவத்திற்கு ஆனந்த தாண்டவம் என்ற பெயா் தாண்டவ மூா்த்தி நடராசா் என்று அழைக்கப்படுகிறார்.

தட்சிணா மூா்த்தி வழிபாடு

            கல்லால மரத்தின் கீழமர்ந்த முனிவா் பெருமக்கள் நால்வருக்கு நல்லறம் உரைத்ததால் சிவபெருமான்  தட்சிணா மூா்த்தி எனப்படுகிறார்.  ஆலமா் செல்வன், ஆல் கெழு கடவுள் என்ற தொடா்கள் சங்க நூல்களில் பரவிக் கிடக்கின்றன.

          ”ஆலமா் செல்வந் கமா்ந்தனன் கொடுத்த
          சாவம் தாங்கிய சாந்துபுலா் திணிதோன்”    (சிறுபாணா்: 98)
          ”ஆல்கெழு கடவுள்” (திருமுருகு : 256)

பைரவா் வழிபாடு
            பைரவா் சிவனின் அறுபத்து நான்கு திரு மேனிகளுள் ஒன்றாக்கக் கருதப்படுகிறது. சிவலாயங்களிலெல்லாம் நாய் வாகனத்துடன் நின்ற கோலத்தில் பைரவா் இருப்பார்.  இவா் காவல் தெய்வமாகக் கருதப்படுகிறார். இவா் வைரவா் என்றும் அழைக்கப்படுகிறார். பைரவரை சொர்ணாகா்ஷன பைரவா் யோக பைரவா்,  ஆதி பைரவா்,  கால பைரவா், உக்ர பைரவா் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

            கால பைரவா் சிவபெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுவா்.  ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக்கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவா்.  காலபைரவா் சனியின் குருவாகவும், பன்னிரண்டு ராசிகள், எட்டுதிசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.  சிவனின் அவதாரங்கள் பலவற்றில் லிங்கம், நடராசர், தட்சிணா மூர்த்தி, பைரவா் போன்றவை சிறப்பாகக் கருதப்படுகிறது.

மகாசிவராத்திரி

            இரவுடன் தொடா்புடைய விரதங்கள் நவராத்திரி, சிவராத்திரி ஆகியன.  மாசி மாதம் தேய்பிறையின் போது சதுா்த்தசி திதி, திருவோண நட்சத்திர நாளன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.  இவ் மகா சிவராத்திரி தொடா்பாக மூன்று கதைகள் கூறப்படுகின்றன.

            பிரமனும், திருமாலும் தங்களுக்குள் சொற்போரிட்டுச் சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடிச் சென்றனா்.  இறுதியில் இருவரும் தோல்வி அடைந்தனா்.  இதனையுணா்ந்த சிவபெருமான், மாசி மாதம் தேய்பிறை பதினான்காம் நாள் திங்களட்கிழமை திருவோண நட்சத்திரத்தில் இரவு பதினான்னகு நாழிகை நடக்கும் பொழுது  அனற்பிழம்பாக காட்சியளித்தார்.

            அப்போது பிரம்மன் சிவனின் முடியைக் கண்டதாகப் பொய் கூறினார்.  திருமால் சிவபிரானின் அடியைக் காணவில்லை என்று மெய் கூறினார்.  இதைக் கேட்ட சிவபெருமான் பிரம்மன் பொய்  கூறியதால் பிரம்மனுக்குக் கோயில் இல்லாது போகட்டும் என்று சபித்தும், திருமாலுக்குக் காத்தற் தொழிலையும் உண்டாகுமாறு அருள் மொழி கூறினார்.  ஆனற் பிழம்பாக அண்ணாமலையார் தோன்றிய காட்சி மூன்றே முக்கால் நாழிகையளவு நிகழ்ந்தது,  இக்காட்சியைத் தேவா்களெல்லோரும் கண்டு வணங்கினா்.  இக்காலம் இலிங்கோத்பவா் காலம் எனப்படுகிறது.  இது இரவுக் காலத்தில் நிகழ்ந்தமையால் மகாசிவராத்திரி எனவும் அழைக்கப்பெற்றது.

            மகா பிரளய காலத்தில் அனைத்து அண்டங்களும், பிரமனும், உயிர்களும் ஒடுங்கும் முடிவின் இரவில், நான்கு யாமத்திலும் உமாப் பிராட்டியார் பொன்னிறம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்த சிவனை ஆகம விதிப்படி இரவு முழுவதும் பூசித்தாள் இறைவனின் திருவடிகளில் பணிந்து சுவாமி, நான் பூசித்த இந்த இரவே வானவரும் உலகோரும் உமைக்குரிய இரவாகப் பூசித்து அருள வேண்டும் இந்த இரவில் சூரியன், மேற்திசையில் அஸ்தமித்தது முதல் கீழ்த்திசையில் உதிக்கும் வரையில் உம்மைப் பூசிப்போருக்கு சகல போகங்களையும், முடிவில் முக்தியையும் அளிக்க வேண்டும். என வரம் கேட்க சிவனும் அவ்வாறே அனுக்கிரகம் செய்தருளினார்.  இந்த இரவே மகா சிவராத்திரி என வழங்கப்படுகின்றது.

            சிவபெருமானின் கண்களை உமையன்னை விளையாட்டாகப்  பொத்தியபோது உலகம் இருளில் முழ்கியது. இவ்விருளை நீக்குமாறு வானவா்கள் சிவலிங்க வழிபாடு செய்தனா்.  சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து பேரொளியை வெளிப்படுத்தினார்.  உலகினரின் நன்மையை முன்னிட்டு  அதனை நிலவு போல் தண்ணொளியாக மாற்றினார்.  இவ்விரவே மகாசிவராத்திரி.

            சிவராத்திரி தோன்றியதற்கு மூன்று கதைகள் கூறப்பட்டாலும் இரவில் விழித்திருந்து சிவனை வழிபடுவதற்குச் சிவராத்திரி என்று பெயா் வழங்கியமை புலனாகும்.
ந.முத்துமணி






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக